மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழந்தது: மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் 2-வது சம்பவம்

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழந்தது: மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் 2-வது சம்பவம்
Updated on
2 min read

சென்னை

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து சிறுவன் அபிநவ் உயிரிழந்தது முதல் சம்பவமல்ல, இதற்கு முன்னரும் அதே இடத்தில் கல்லூரி மாணவர் கழுத்து அறுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

கொருக்குப்பேட்டை பாரதி நகரில் உள்ள மீனாம்பாள் நகர் மேம்பாலத்தின் மீது காற்றாடி நூல் அறுந்து வந்து விபத்து ஏற்படுவது இரண்டாவது சம்பவம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரி மாணவர் மாஞ்சா நூலில் சிக்கி உயிர் மீண்டார்.

கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் அரிகிருஷ்ணன் (22). மீஞ்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் ரயில் நிலையம் வரை சென்று அங்கிருந்து ரயில் மூலம் கல்லூரிக்குச் செல்வார்.

மாலையில் ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மாலை வழக்கம்போல் கல்லூரியிலிருந்து ரயிலில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்த அரிகிருஷ்ணன், ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகரில் உள்ள புதிய மேம்பாலத்தில் வந்தபோது எங்கிருந்தோ அறுந்து மாஞ்சா நூலுடன் வந்த காற்றாடி திடீரென மாணவர் அரிகிருஷ்ணனின் கழுத்தை அறுத்தது.

நல்வாய்ப்பாக அவர் கழுத்தை பெரிதாக அறுப்பதற்குமுன் கீழே விழுந்தார். ஆனாலும் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரிகிருஷ்ணன் நீண்டகால சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.

இது சம்பந்தமாக ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காற்றாடி விட்டவர்களைத் தேடி வந்தனர். வடசென்னையில் விடுமுறை நாட்களில், பண்டிகை நாட்களில் இதுபோன்று காற்றாடி விடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

வண்ணாரப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் விற்பது எங்கு என்பது சிறுகுழந்தைக்குக்கூட தெரியும். ஆனால் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.கே.நகர் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே தற்போது உயிர் பலி ஏற்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்பகுளத் தெருவில் வசிப்பவர் கோபால் (35). இவர் மனைவி சுமித்ரா (28). இவர்களது ஒரே மகன் அபிநவ் ஷராப் (3). நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோபால், தனது மனைவி மற்றும் மகன் அபிநவ் ஷராப்புடன் தனது இருசக்கர வாகனத்தில் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மாலை தனது வீட்டுக்கு மகனுடன் திரும்பினார். 3 வயது குழந்தை என்பதால் முன்பக்கம் பாதுகாப்பாக அமர்த்தி மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர் பாலத்தின் மேல் தனது இருசக்கர வாகனத்தில் கோபால் வந்துகொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பட்டம் அறுந்து வந்த மாஞ்சா நூல் மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்றுகொண்டிருந்த அபிநவ் ஷராப்பின் கழுத்தை அறுத்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் அபிநவ் கீழே விழுந்தார். இதனால் பதற்றமடைந்த கோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்திப் பார்த்தபோதுதான் குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தெரிந்தது.

ரத்த வெள்ளத்தில் மயக்கமான குழந்தை அபிநவ் ஷராப்பை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆட்டோவில் ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அபிநவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 4 பேரை ஆர்.கே.நகர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொருக்குப்பேட்டை காமராஜர் நகரில் வசிக்கும் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர், கொருக்குப்பேட்டை சாஸ்திரி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், தண்டையார்பேட்டை, நேரு நகரில் வசிக்கும் தனியார் வங்கியின் கலக்‌ஷன் ஏஜெண்ட் , தண்டையார்பேட்டை குமரன் நகரில் வசிக்கும் 65 வயது முதியவர் ஆகிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கும் குழந்தை அபிநவ் உயிரிழப்புக்குக் காரணமான மாஞ்சா நூல் விவகாரத்துக்கும் சம்பந்தம் உள்ளதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருத்தல் ஐபிசி பிரிவு 304(1) பிரிவு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே காசிமேட்டில் பட்டம் விற்பனை செய்த சார்லஸ் என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாஞ்சா நூல், காற்றாடியால் இதுவரை அதிக உயிரிழப்புகள் நடந்ததும், விபத்து நடந்ததும் வடசென்னை, மத்திய சென்னைப் பகுதிகள்தான். இங்குதான் அதிக அளவில் காற்றாடி, மாஞ்சா நூல் விற்கப்படுகிறது. ஒவ்வொரு சம்பவத்தின்போதும் அதுகுறித்து பரபரப்படைவதும், பின்னர் அலட்சியமாக இருப்பதும் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழக் காரணமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in