

மதுரை
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் திருப்பத்தூர் மருத்துவ மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த சென்னை மாணவர் உதித் சூர்யா சிக்கினார். இவர்தான் நீட் முறைகேட்டில் முதலில் சிக்கியவர். அவரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. உதித் சூர்யாவைத் தொடர்ந்து ராகுல், பிரவீன், இர்பான் ஆகிய மாணவர்களும் பிரியங்கா என்ற மாணவியும் கைதாகினர்.
இவர்களில் திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் இர்பானின் தந்தை முகமது ஷபி. இவர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதில்," நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது. நான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாணவரின் தந்தை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை எனவும், நீட் தேர்வு நடந்தபோது அவரது மகன் மொரீசியசில் இருந்ததால் நீட் தேர்வில் முறைகேடு செய்தது உண்மையே எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி தந்தையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நீட் தேர்வு முறைகேடு வழக்கில், இதுவரை (உதித்சூர்யா- சென்னை, பிரவீன்- சென்னை, ராகுல் டேவிஸ்- சென்னை, முகமது இர்பான்- திருப்பத்தூர்) 4 மாணவர்களுக்கும், (பிரியங்கா- தர்மபுரி) 1 மாணவிக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 3 மாணவர்களில் தந்தையர் மற்றும் மாணவி பிரியங்காவின் தாயார் மைனாவதி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.