Published : 04 Nov 2019 12:47 PM
Last Updated : 04 Nov 2019 12:47 PM

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு 1 கிலோ தரமான அரிசி; பசுமைத் தாயகம் சார்பில் வழங்கப்படும்: ராமதாஸ் அறிவிப்பு

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

பசுமைத் தாயகம் சார்பில், 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.4) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்துவிட்டாலும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் குப்பைகளின் உருவாக்கமும் அதிகரித்து வரும் சூழலில், அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் பற்றி நினைத்துப் பார்க்கவே அச்சமாகவுள்ளது.

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 01.01.2019 முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திரையரங்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுப் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் பிளாஸ்டிக் பயன்பாடு மகிழ்ச்சியளிக்கும் அளவுக்குக் குறையவில்லை.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய பயோ பைகள், காகிதப் பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாகப் புழங்குவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பான்மையான சிறிய கடைகளிலும், கணிசமான அளவில் பெரிய கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதற்கு இணையாக பிளாஸ்டிக் கழிவுகளின் உருவாக்கமும் அதிகரித்துவிட்டன என்பது வேதனையான உண்மையாகும்.

தமிழகத்தின் கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. சாலைகளில் பயணம் செய்யும் போது சுங்கச்சாவடிகளுக்கு அருகிலும், கோயில்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் குன்றுகளைப் போல குவிந்து கிடப்பது சாதாரணமான காட்சிகளாகிவிட்டன.

அண்மையில் சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை கோவளம் விடுதியில் தங்கியிருந்தபோது கூட, கடலில் இருந்து அலைகளால் அடித்து வரப்பட்ட ஏராளமான குப்பைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சேகரித்தது நினைவிருக்கலாம். கடல்கள் எந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியிருக்கின்றன என்பதற்கு இதுவே உதாரணம்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையாததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரு காரணங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். முதலாவது, பல பத்தாண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி வரும் மக்கள், அவற்றை தங்களின் வாழ்வில் ஒருங்கிணைந்த அம்சமாக கருதுகின்றனர். அவற்றுக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கலும், வசதிக் குறைவும் உள்ளன.

இரண்டாவது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்துவது சற்று செலவு பிடிக்கும் விஷயமாகும். இந்த இரு தடைகளையும் தகர்த்து பிளாஸ்டிக் தடையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டியது அனைவரின் கடமையும் ஆகும்.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 கோடி டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அவற்றில் வெறும் 9% மட்டும் தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் பெரும்பகுதி கடலுக்குள் வீசப்படுகின்றன. கடல்வாழ் உயிரினங்களின் உயிரிழப்புக்கு மிக முக்கியமான காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்தான்.

உலகிலேயே மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் வீசும் நாடு பிலிப்பைன்ஸ்தான். அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் குப்பைகள் வீசப்படுவது கணிசமாக குறைந்திருப்பதாக அந்நாட்டு அரசின் முதல்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.

அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வெகுவிரைவில் தடை செய்யப்பட உள்ளன. அதற்கு மக்களைத் தயார்படுத்தும் வகையில், அம்மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் நாராயணரெட்டி அறிவித்தார். அம்மாவட்டத்தின் 174 கிராமங்களில் 10 நாட்களுக்குச் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஆந்திரத்தில் சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி தரும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். இது பயனுள்ள திட்டம் என்பது உலக அளவிலும், தேசிய அளவிலும் உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய வார இறுதி நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும். 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாகச் செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x