Published : 04 Nov 2019 12:04 PM
Last Updated : 04 Nov 2019 12:04 PM

மாயோனை கிருஷ்ணராக்கினர்; இப்போது திருவள்ளுவருக்கு காவி அடிக்கின்றனர்: சீமான் விமர்சனம்

சீமான், பாஜக ட்விட்டரில் பதிவிட்டிருந்த திருவள்ளுவர் படம்

திருச்சி

மாயோனை கிருஷ்ணராக்கியவர்கள் திருவள்ளுவரை காவிமயப்படுத்துவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து திருச்சியில் இன்று (நவ.4) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "மாயோனை கிருஷ்ணர் எனவும் அருள்மொழி சோழனையும், அவர் மகன் அரசேந்திர சோழனையும் இந்து மன்னர்கள் எனவும் பேசித் திரிந்து, எல்லாவற்றையும் தன்வயப்படுத்திக்கொண்டவர்கள் இப்போது பொதுமறை தந்த வள்ளுவருக்குக் காவியடித்து தன்வயப்படுத்தப் பார்க்கிறார்கள். இது வழமையாக அவர்கள் செய்யும் ஒன்றுதான்.

இப்போது அவர் சிலைக்கு கருப்புத் துணி கட்டி, சாணியைக் கரைத்து ஊற்றியிருக்கின்றனர், இது தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கும் செயல். தமிழ்ச்சமூகம் பண்பான சமூகம் என்பதால், அது போர்க்குணம் அற்றதாகி விட்டது. நாகரிகமாகி விட்டதால், வீதியில் இறங்கிப் போராடுவது குறித்து தமிழ்ச்சமூகம் வெட்கம் அடைகிறது. ஆனால், தன்மானத்திற்கு இழிவு வரும்போது, வெகுண்டெழுந்தால் அது பெரும் பிரச்சினையாகிவிடும்.

வள்ளுவரை நாங்கள் தெய்வமாகப் போற்றுகிறோம். அவரை இழிவுபடுத்துவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஹெச்.ராஜா, சனாதன தர்மப்படிதான் திருவள்ளுவருக்குக் காவியை உடுத்தியிருப்பதாகக் கூறுவது வீண் வம்புப் பேச்சு. இந்து தர்மப்படிதான் திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று சொன்னால், 'இந்து', 'இந்தியா' என்ற சொற்களே இங்கு இல்லை. 'இந்தியா' என்ற நாட்டையும், 'இந்து' என்ற மதத்தையும் ஆங்கிலேயர்கள்தான் சட்டப்படி உருவாக்கினர். நாங்கள் சட்டப்படி இந்துவா? சரித்திரப்படி இந்துவா என்ற விவாதத்திற்கு வருவதற்கு நீங்கள் தயாராக இல்லை.

உங்கள் சனாதன தர்மம் 4 வகையான வர்ணாசிரமக் கோட்பாடுகள் இருப்பதாகச் சொல்கிறது. எங்கள் வள்ளுவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என எழுதியிருக்கிறார். இதை அவர்கள் ஏற்பார்களா? படித்தால் காதில் ஈயத்தைக் கரைத்து ஊற்ற வேண்டும், படித்தால் பேயாக பிறப்பீர்கள் என்று மனுதர்மம் சபிக்கிறது.

எங்கள் தர்மம் அப்படியில்லை. எங்கள் வேதம் அப்படிச் சொல்லவில்லை. 'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என போதிக்கிறது. கல்விக்கு என 10 குறள்களைத் தந்திருக்கிறது. இதை ஏற்பார்களா? அரசியல் செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. மக்களின் நலன், நிலம், வளம் ஆகியவை குறித்துச் சிந்திக்காமல், தமிழகத்தின் அமைதியைக் கெடுக்கக் கூடாது. இதுதான் எனது வேண்டுகோள்; எச்சரிக்கை," என சீமான் தெரிவித்தார்.

மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சீமான், "இவை தேவையற்ற கொடும் நடவடிக்கை. அதிகாரம் நிரந்தரம் என நினைத்துச் செய்கின்றனர். இது தவறானது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை," எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x