Published : 04 Nov 2019 11:34 AM
Last Updated : 04 Nov 2019 11:34 AM

அமைதியாகுங்கள்; என்ன உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்; விமர்சனங்களுக்கு ஜோதிமணி பதில்

விமான நிலையத்தில் ஜோதிமணி - செந்தில் பாலாஜி

சென்னை

தன் உடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி பதில் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி அவரை வழியனுப்பி வைத்தார்.

செந்தில் பாலாஜி பதிவிட்டிருந்த புகைப்படத்தில், ஜோதிமணி, ஜீன்ஸ் - டீ ஷர்ட் உடை அணிந்திருந்தார். இந்நிலையில், அவர் அணிந்திருந்த உடை மீதான விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்தது. பெரும்பாலான சமயங்களில் புடவை அணியும் ஜோதிமணி, ஜீன்ஸ் - டீ ஷர்ட் உடை அணிந்திருந்ததை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், அந்த விமர்சனங்களுக்கு ஜோதிமணி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி இன்று (நவ.4) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச அளவில் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாட்டில் நான் கலந்துகொள்வதற்காக, என் தொகுதியிலிருந்தும் வெளியிலிருந்தும் எனக்கு வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. என் உடை குறித்து விமர்சிக்கும் காவிவாதிகள், பெண் வெறுப்பாளர்களின் நெஞ்செரிச்சலைப் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நிகழ்வுக்கு எப்படி உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இது என்னுடைய தனிப்பட்ட உரிமை. அமைதியாகுங்கள்.

ஏன் எப்போதும் பெண்ணின் உடை விவாதத்துக்கு உள்ளாகிறது? ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் மீது மற்றவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அனைத்து ஆண்களும் குறிப்பாக உடை குறித்து விமர்சிப்பவர்கள், தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேட்டி அணிகின்றனரா? மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ்/இந்தியக் கலாச்சாரம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

காட்டன் புடவைகள், ஜீன்ஸ், ஷார்ட் ஷர்ட்டுகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமான உடைகள். நான் திரும்பி வந்தவுடன், அவற்றில் சிலவற்றை நீங்கள் மேலும் நெஞ்செரியும் வகையில் பதிவிடுவேன். அதுவரை, கலாச்சாரம் என்றால் என்ன எனத் தேடுங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னோக்கிச் செல்வதில் ஏன் இத்தனை சுமைகள்? ஏன் ஆண்களுக்கு இல்லை.

பெண் தலைவர்கள் தங்கள் தோற்றம், உடை, சிரிப்பு, மண வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள் என்பதும் ஆண்கள் ஏன் அவ்வாறு அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்தக் கூட்டம். பெண்கள் மீதான இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் உறுதியுடன் போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும் நன்றி," என ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x