கோப்புப்படம்
கோப்புப்படம்

வேலூர் மத்திய சிறையில் நளினி 9-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம்: குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

Published on

வேலூர்

வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோருக்கு நேற்று குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் சிறையில் முருகன் அறையில் செல்போன், சார்ஜர், சிம்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக பாகாயம் காவல் துறையினர் முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, முருகன் தனி அறையில் அடைக்கப்பட்டார். முன்கூட்டியே விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முருகன் கடந்த 17 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனை காப்பாற்றவும், முன்கூட்டியே விடுதலை செய்யவும் வலியுறுத்தி முருகனின் மனைவி நளினியும் சிறையில் கடந்த 26-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9-வது நாளாக நேற்றும் நளினி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

அவரிடம் சிறைத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

நளினி - முருகன் தொடர் போராட்டத்தால் அவர்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சிறையில் நளினிக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து முருகனுக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 2 பேரையும் மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதாகவும், போராட்டத்தை வாபஸ் பெறுமாறு நளினியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in