Published : 04 Nov 2019 10:58 AM
Last Updated : 04 Nov 2019 10:58 AM

குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவது குறித்து கடல்சார் விஞ்ஞானிகள் தொடர் ஆய்வில் ஈடுபட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

சென்னை

குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்குத் தேவையான தொடர் ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்று தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளை குடியரசு துணைத் தலைவர்வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னைக்கான கடலோர வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு முறையை தொடங்கிவைத்து, வெள்ளி விழாசிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். வெள்ளி விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் நிலம், நீர் உள்ளிட்ட வளங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிலம், நீர் உள்ளிட்ட வளங்களை எவ்வாறு கையாள்வது, நாட்டில் தற்போது தண்ணீர் பிரச்சினை உள்ளது. இது, எதிர்காலத்தில் மிகப்பெரிய சவாலாக மாறும். தண்ணீருக்காக போர் உருவாகும் அபாயம்கூட இருக்கிறது.

எனவே, நாம் கடல்நீரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்படுகிறது. ஆனால், இதற்கான உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. எனவே, குறைந்த செலவில் கடல்நீரைகுடிநீராக்குவதற்குத் தேவையான தொடர் ஆய்வுகளில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் ஈடுபட வேண்டும்.

அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய 6 ரூபாய் 60 காசுகள் ஆகின்றன. சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய 2 ரூபாய்தான் செலவாகிறது. ஆனால், சூரிய மின்சக்தி உற்பத்திக்கான கட்டமைப்புகளை அமைக்க அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. குறைந்த செலவில் சூரிய மின்சக்தி பெறுவதற்கான தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும்.

அதேநேரத்தில் பருவநிலை மாற்றம், காற்று மாசு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார மேம்பாட்டுக்காக துறைமுகங்களைமென்மேலும் மேம்படுத்த வேண்டும். அதுபோல சுற்றுலாவையும் மேம்படுத்த வேண்டும். குறைந்த செலவில் நிறைந்த பயன்பாட்டைப் பெறுவது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும். பள்ளிக் குழந்தைகளிடம் அறிவியல் உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

கடல் பொருளாதார மேம்பாட்டுக்கு எதிரான சவால்களை எதிர்கொள்ளவும், நிலைத்த, நீீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது, ‘‘சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு முறையில் உலக அளவில் இந்தியா முதன்மையான இடத்தில்உள்ளது. அதன்மூலம் ஏராளமானமக்களின் உயிர்கள் மட்டுமின்றி,பெருமதிப்புள்ள அவர்களது உடைமைகளும் காப்பாற்றப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியாசிறப்பாக செயல்படுகிறது. லட்சத்தீவு பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் 6 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. நிதிஆயோக் அமைப்புடன் இணைந்துஇத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். 3 கி.மீ. ஆழத்தில் சுரங்கம்அமைத்து நிலநடுக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வின் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசும்போது, ‘‘எரிசக்திபாதுகாப்பு, நீர்வளப் பாதுகாப்பு, கடல் பரப்பில் உள்ள தாதுக்களை கண்டறிந்து பயன்படுத்துதல் போன்ற கடல்வளத்தை மேம்படுத்தும் ஆய்வுகளுக்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இந்நிறுவனம் கடல்வள தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், அதை மென்மேலும் வளர்ப்பதற்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது’’ என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1993-ம் ஆண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த நிறுவனம் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. இந்த விழாவில் வெளியிடப்பட்ட கடலோர வெள்ள எச்சரிக்கை அறிவிப்பு முறை தமிழகத்துக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

முன்னதாக புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ராஜீவன் வரவேற்றார். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் எம்.ஏ.ஆத்மானந்த் நன்றி கூறினார். இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x