

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக பலத்த மழை பெய்தது. செங்கோட்டையில் 76 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் மழையின் தீவிரம் குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து மீண்டும் பலத்த மழை பெய்தது.
மழை அளவு
காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 76 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:
குண்டாறு அணை- 49, பாளை யங்கோட்டை- 37, சங்கரன்கோவில், திருநெல்வேலியில் தலா 35, ராமநதி அணை, அடவிநயினார் கோவில் அணையில் தலா 30, சிவகிரி- 26, கருப்பாநதி அணை- 23, சேரன்மகாதேவி, தென்காசியில் தலா 19, ஆய்க்குடி- 14.60, அம்பாசமுத்திரம்- 3, சேர்வலாறு, கடனாநதி அணை, நாங்குநேரியில் தலா 1 மி.மீ மழை பெய்திருந்தது.
தொடர் மழையால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு ஆகிய 4 அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அணைகள் நிலவரம்
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர்வரத்து விநாடிக்கு 1,317 கனஅடியாக இருந்தது. 542 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் 132.40 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 145.67 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 407 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. அணை நீர்மட்டம் 61.50 அடியாக இருந்தது.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 7 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 15.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாகவும், அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 127 அடியாகவும் இருந்தது.
குற்றாலம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தில் செல்லையா என்பவரது ஓட்டு வீடு தொடர் மழையால் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது.