

உதகை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் உதகையில் ஞாயிறு தோறும் ‘மகளிர் சந்தை’யை தொடங்கியுள்ளது மகளிர் திட்டம்.
மகளிரின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் மகளிர் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், 3000-க்கும் மேற்பட்ட குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வங்கிகளில் கணக்கு தொடங்கி, ஆறு மாதங்கள் கணக்கு பராமரிக்கப்படும் குழுக்களை தேர்வு செய்து, தரமதிப்பீடு அடிப்டையில், அவர்களுக்கு வங்கிகள் சார்பில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பூமாலை வளாகம் கட்டப்பட்டது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக சுய உதவிக்குழுவினர் கடைகளை நடத்தி வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த விற்பனை வாய்ப்பு அதிகமுள்ள இடங்களைத் தேர்வுசெய்து ‘மதி அங்காடி’ என்ற பெயரில் விற்பனை அங்காடிகளை அமைக்க அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் மதி அங்காடிக மாக மாறிய பூமாலை வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் பொருட்களை சந்தைப்படுத்த ‘மகளிர் சந்தை’ தொடங்கப் பட்டுள்ளது. இதில் கோத்தகிரி மக்களின் மண் பாண்டங்கள், சிலைகள், தோடரின மக்களின் பாரம்பரிய பூ வேலைப்பாடுடன் கூடிய துணிகள், இருளர், குறும்பர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவுகள், கைகளால் உற்பத்தி செய்யப்படும் சோப்புகள் விற்பனை செய்யப் படுகின்றன.
மேலும், அரைஸ் என்ற அறக்கட்டளை மூலம் சிறைக் கைதிகளின் தயாரிப்பில் மறு சூழற்சி முறையில் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளும், மண்ணில் செய்யப்பட்ட இட்லி பாத்திரம், குக்கர், தட்டு, டம்ளர்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. ஞாயிறுதோறும் பூமாலை வளாகத்தில் மகளிர் சந்தை நடத்தப்படும் என மகளிர் திட்ட இயக்குநர் பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘மகளிர் திட்டத்தின் மூலம், மகளிர் குழுக்களுக்கு தரமதிப்பீடு செய்து கடன் இணைப்பு செய்து, சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், கலாச்சார போட்டிகள், வேலை வாய்ப்பு முகாம்கள், கண்காட்சிகள் மற்றும் கல்லூரி சந்தை நடத்தி வருகிறோம். இதில் சுய உதவிக்குழுக்களின் பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்கிறோம். இந்நிலையில், அந்த பொருட்களை சந்தைப்படுத்த அடுத்தகட்டமாக ‘மகளிர் சந்தை’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஒவ்வொரு ஞாயிறுதோறும் இந்த சந்தை நடத்தப்படும். முதற்கட்டமாக உதகை பூமாலை வளாகத்தில் இந்த சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து, பிற வட்டங்களில் மகளிர் சந்தை நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றார்.