நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை நீர்மட்டம்: கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு
பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் நேற்று மாலை நிலவரப்படி 104.20 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில், 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அக்டோபர் மாத இறுதி வரை அணையில் 102 அடி வரை மட்டும் நீர் இருப்பு வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி முதல், 105 அடி வரை நீர்தேக்கலாம் என்பதால், உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 102 அடியாக இருந்த நீர்மட்டம் 2 நாட்களில் 2 அடி உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 104 அடியைக் கடந்த நிலையில், மேலும் ஒரு அடி உயர்ந்தால் (105 அடி) அணை முழுக்கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. ஆனால், நேற்று அணைக்கான நீர் வரத்து குறைந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 104.20 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 32.127 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2841 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2000 கன அடி நீரும் என மொத்தம் 2600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர் வரத்து அதிகரித்தால், பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டும் என்பதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் முலம் பவானி ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
