

மு.யுவராஜ்
சென்னை
உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் புதிய குழுக்களை உருவாக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட மக்கள்நீதி மய்யம் கட்சி 3.69 சதவீதம்வாக்குகளை பெற்றது. நகர்ப்புறங்களில் சில தொகுதிகளில் 3-வதுஇடம் பிடித்தது. இருப்பினும்,கிராமப் புறங்களில் எதிர்பார்த்த அளவு வாக்குகளை பெற முடியவில்லை.
புதிய பொறுப்புகள்அதன்பிறகு நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.
2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை மையமாக வைத்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன்படி, கட்சியை நிர்வகிக்க புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர, அடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் புதிய குழுக்கள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.
இதன்படி, ஒருங்கிணைப்பு பிரிவுக்கான பொதுச் செயலாளராக ஏ.சவுரிராஜன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பல்வேறு குழுக்களை அமைத்துதேர்தல் பணிகளை உடனடியாகதொடங்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சி கட்டமைப்பு போல, தேர்தல் பணிகளை மேற்கொள்ள பல்வேறு புதிய குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
இதன்படி, தேர்தலுக்கான பணிகளை ஒருங்கிணைப்புபொதுச் செயலாளர் ஏ.சவுரிராஜன் மேற்கொள்ள உள்ளார். 8 மண்டலங்கள்இவருக்கு கீழ் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தலா 1 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு கீழ், தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கோவை, சேலம், காஞ்சிபுரம், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் ஆகிய 8 மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் கோவை, திருநெல்வேலி, மதுரை மண்டலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மற்ற மண்டலங்களுக்கு விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு கீழ், நாடாளுமன்ற, சட்டப்பேரவை தொகுதிகள், மாநகராட்சி, நகர பஞ்சாயத்து, நகரம், ஒன்றியம், பூத் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் புதிய குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
பல்வேறு வியூகங்கள்பொதுவாக அனைத்து கட்சிகளிலும் தேர்தல் சமயத்தில்தான் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், புது கட்சியான மக்கள் நீதி மய்யம் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதால், பல்வேறு வியூகங்கள் வகுத்து பணிகள் நடந்து வருகின்றன.
இதில் ஒன்றுதான் புதிய குழுக்களை உருவாக்குவது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இக்குழுக்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படும். வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களில் இக்குழுவினர் பணியாற்றுவார்கள். கட்சித் தலைவர் கமல்ஹாசனின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையுடன் தேர்தல் பணிகளில் இக்குழுவினர் தனித்து செயல்படுவார்கள். இவ்வாறு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.