

சென்னை
மின்னணு காப்பீடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் காப்பீட்டு நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
பொதுமக்களிடையே தற்போது ஆயுள்காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை எடுப்பது குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. எனினும், காப்பீடு எடுத்த பிறகு அந்த ஆவணங்களை சரியாக பாதுகாத்து வைக்காததால், அவர்களால் அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்வகையில் மின்னணு காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து, பாலிசிதாரர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் காப்பீட்டு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதுகுறித்து, இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் காப்பீட்டுத் தொகையில் இழப்பீட்டுத் தொகை பெறப்படாமல் இருக்கிறது.இதற்கு முக்கியக் காரணம் சரியான ஆவணங்கள் இல்லாததுதான்.
இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்தான், மின்னணு காப்பீடு எனப்படும் இ-இன்சூரன்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மின்னணு காப்பீட்டுக் கணக்கைநிர்வகிக்கும் உரிமை என்எஸ்டில், சிடிஎஸ்எல், கார்விமற்றும் காம்ஸ்ரெப் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இ-இன்சூரன்ஸ் அக்கவுன்ட்டை பாலிசிதாரர்கள் பான்கார்டு அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தொடங்கலாம்.
மின்னணு காப்பீட்டு விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ITREX-Insurance Transaction Exchange என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. பாலிசிகளை விற்பனை செய்வது, பாலிசி ஆவணங்களைப் பாதுகாப்பது போன்ற சேவைகளுக்காக காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் தொகையை செலவு செய்கின்றன. இந்தமின்னணு காப்பீட்டு முறையில் இப்பணிகள் எளிதாவதோடு, செலவும் மிச்சமாகும்.
மேலும், பாலிசிதாரர்கள் மின்னணு காப்பீட்டு முறையில் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதும் எளிதாக உள்ளது. அவருடைய கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படுவதால், பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவருக்கான பாலிசி செட்டில்மென்ட்டை காப்பீட்டு நிறுவனங்களால் எளிதாக மேற்கொள்ள முடியும்.
குறிப்பாக, மருத்துவக் காப்பீடுகளில் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. நோயாளிஒருவர் சிகிச்சை முடித்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும்,அவருக்கான மருத்துவக் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைத்து வீட்டுக்குச் செல்ல பல மணி நேரம் ஆகிவிடுகிறது. இழப்பீட்டுத் தொகை ஆவணங்களை தயார் செய்து, காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பி அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற அதிக நேரம் ஆகிறது.
ஆனால், இந்த மின்னணு காப்பீட்டு முறையில் இந்த வேலைகள் அனைத்தும் 30 நிமிடங்களில் முடிந்து இழப்பீட்டுத் தொகை செட்டில்மென்ட் செய்யப்படும்.
மின்னணு முறையில் அனைத்து நடைமுறைகளும் செயல்படுத்தப்படுவதால், மின்னணு காப்பீட்டுமுறையில் ஏதேனும்பிரச்சினை என்றாலும் அதை உடனடியாகசரிசெய்யலாம். இதற்காக ஏஜென்ட்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை.
அத்துடன், பாலிசி புதுப்பித்தல், பிரீமியம் செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு எளிதில் காப்பீட்டு நிறுவனங்களால் தெரிவிக்க முடியும்.
மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் பாலிசி ஆவணங்கள் சேதம் அடைந்தால், இழப்பீட்டுத் தொகைபெறுவதில் பெறும் சிக்கல் ஏற்படும். ஆனால், மின்னணு காப்பீடு மூலம் நாம்பாலிசி ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. ஆவணங்கள் அனைத்தும் மின்னணு வடிவில் பாதுகாக்கப்படும். மேலும், ஒரு மின்னணுகாப்பீட்டு அக்கவுன்ட்டை வைத்து, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பாலிசிகளை வாங்கலாம். ஏற்கெனவே எடுத்த பாலிசிகளையும் இந்த அக்கவுன்ட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், பாலிசி எடுத்த பிறகுபெயர்மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள விரும்பினால், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்கான அனைத்து அசல் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், இந்த மின்னணு காப்பீட்டு முறையில், ஆன்லைன் கேஒய்சி முறையில் இத்தகைய மாற்றங்களை எளிதில்செய்யலாம். இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த மின்னணு காப்பீடு குறித்துபொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே, இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் காப்பீட்டு நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.