

காஞ்சிபுரம்
திருக்காலிமேடு நகராட்சி குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பையில் தேங்கியுள்ள மழைநீரில், டெங்கு கொசு உற்பத்தியாவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியின் 51 வார்டுகளிலும் வசிக்கும் மக்கள் மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்களால் வெளியேற்றப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதி, நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு ஒன்று அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், குப்பை கிடங்கு அருகே மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்க கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் தினமும் சேகரமாகும் 65 டன் குப்பையில், 15 டன் பிளாஸ்டிக் கழிவாக உள்ளது. நத்தப்பேட்டை ஏரிக்கரையில் கடந்த பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவு அகற்றப்படாமல் தேங்கியுள்ளது.
மேலும், அத்திவரதர் விழாவின்போது சேர்ந்த குப்பையும் இங்கே டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொட்டப்படுவதால், குப்பை கிடங்கு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளன.
இவற்றில் மழையின்போது நன்னீர் தேங்குகின்றது. இதன்மூலம், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.நேரு கூறும்போது, ''நத்தப்பேட்டை ஏரிக்கரையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பை, ஏரியிலும் கலந்து வருகிறது. இதனால், ஏரியில் உள்ள தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும், குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பையால் நோய் தொற்று மற்றும் காற்று மாசு ஏற்படாமல் இருப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மருந்து தெளிக்க வேண்டும்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்படவில்லை. குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால், திருக்காலிமேடு மட்டுமல்லாமல் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் டெங்கு கொசு பரவி வருகிறது. மேலும் குப்பையை தரம் பிரிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உரம் தயாரிப்பு பூங்கா பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் குப்பை கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``திருக்காலிமேட்டில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் ஒருபகுதியில் மட்டுமே குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உரப்பூங்காவில் குப்பை தரம் பிரிப்பதற்கான பணியும் மேற்கொள்ளப்படும்'' என்றனர்.