Published : 04 Nov 2019 09:22 AM
Last Updated : 04 Nov 2019 09:22 AM

கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.60-க்கு விற்பனை

சென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வெங்காய பயிர்கள் அழிந்தன. அதன் விளைவாக கடந்த இரு மாதங்களாக கோயம்பேடு சந்தைக்கு வரும் பெரிய வெங்காயத்தின் அளவு குறைந்து, அதன் விலை உயர்ந்தது.

கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் அதிகபட்சமாக கிலோ ரூ.50 வரை விற்கப்பட்டது. சில்லறை காய்கறி விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது. இதற்கிடையில் கோயம்பேடு சந்தையில் மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. தற்போது கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

மற்ற காய்கறிகளான தக்காளி, உருளைக்கிழங்கு, பாகற்காய் ஆகியவை தலா கிலோ ரூ.25, சாம்பார் வெங்காயம் ரூ.75, கத்தரிக்காய், பீன்ஸ் தலா ரூ.35, வெண்டைக்காய் ரூ.50, முள்ளங்கி, பச்சை மிளகாய் தலா ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.12, கேரட் ரூ.45, பீட்ரூட் ரூ.30, புடலங்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.90 என விற்கப்பட்டு வருகிறது.

வெங்காயம் விலை உயர்ந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:மகாராஷ்டிர மாநிலத்தில் கோடை காலத்தில் பயிரிடப்பட்ட வெங்காய இருப்பு தான் இதுவரை விற்கப்பட்டது. ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளத்தால் பயிர்கள் அழிந்தன.

அதனால்வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயர்ந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் ரூ.37-க்குவிற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.45 ஆக உயர்ந்துள்ளது. மகா ராஷ்டிர மாநிலத்தில் இனிமேல் அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம் வந்தால்தான் விலை குறையும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x