மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு 3டி முறையில் சேலையில் வடிவமைப்பு: பரமக்குடி நெசவாளர்கள் புதுமையான முயற்சி

மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு 3டி முறையில் சேலையில் வடிவமைப்பு: பரமக்குடி நெசவாளர்கள் புதுமையான முயற்சி
Updated on
1 min read

எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்த புகைப்படத்தை பரமக்குடி நெசவாளர்கள் நூல் சேலையில் 3டி முறையில் நெய்து வரவேற்பைப் பெற்றுள்ளனர். மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12-ம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்துப் பேசினர்.

அப்போது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் நெசவாளர்கள் நரேந்திர மோடி, ஜீ ஜின்பிங் சந்திப்பு புகைப்படத்தை நூல் சேலையில் 3டி முறையில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து நெசவாளர் சரவணன் கூறியது:

நெசவாளர்கள் பெரும்பாலும் பட்டுச் சேலைகளில்தான் புகைப்படங்களுடன் கூடிய சேலைகளை தயாரிக்கின்றனர். நூல் சேலையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சேலையை நேராகப் பார்த்தால் இருநாட்டுத் தலைவர்கள் மட்டும் தெரிவர். சேலையின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்து பார்த்தால் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களும் தெரியும் வகையில் 3டி முறையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் ஆகும்

தமிழகத்தில் முதன்முதலாக பரமக்குடியில்தான் புகைப்படத்துடன் கூடிய நூல் சேலை வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சேலையை நெய்வதற்கு குறைந்தது 5 நாட்களாவது ஆகும். சென்னையில் நடைபெற்ற கைத்தறிக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த இந்த சேலைக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த சேலையைக் கேட்டு பலரும் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு நெசவாளர் சரவணன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in