

சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு, வேட்புமனுக்களும் பெறப்பட்டன. இந்நிலையில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்த தேர்தலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் பல்வேறு காரணங்களை கூறி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப்போட்டு வந்தது. இதற்கிடையில் இனியும் தாமதம் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின்போது, ‘வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிட அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் தேவை’ என்று மாநில தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் வெளியிட்டு, குறித்த காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ஆர்.பழனிசாமி மீண்டும் ஒரு மனுவை கடந்த மாதம் 25-ம் தேதி தாக்கல் செய்துள்ளார்.
அதில் "தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பாரத் எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு முதல்கட்ட பரிசோதனை நடத்தவேண்டி உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக இப்பணியை நவம்பர் 3-வது வாரத்தில்தான் முடிக்க முடியும் என்று அந்த நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதன் காரணமாக, ஏற்கெனவே உத்தரவாதம் அளித்தபடி அக்டோபர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட இயலாது. எனவே, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட மேலும் 4 வாரம் அவகாசம் தேவை. டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதனிடையே, டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு அறிவிப்பு வெளியாக சாத்தியம் உள்ளதா என உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி சில தினங்களுக்கு முன்பு, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அதில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வரும் நவம்பர் 18-ம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே வார்டுகள் அளவில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த உள்ளாட்சிகள் அளவில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் திருத்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பல மாநகராட்சிகளில் போதுமான வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்னும் தயார்படுத்தவில்லை. அவற்றை சரிபார்க்கும் பணிகளும் இன்னும் முடியவில்லை.
மேலும் ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் வார்டுகளை மறு வரையறை செய்வது, பெண்கள், ஆதிதிராவிடர்களுக்கான வார்டுகளை நிர்ணயிப்பது போன்றவற்றுக்கான அதிகாரத்தை மாநகராட்சி ஆணையருக்கு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் முடிக்க குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவை. அதனால், டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.