

சென்னை
சென்னையில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது 3 வயது குழந்தையின் கழுத்தில் பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு கிருஷ்ணப்ப குளத் தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அபிநவ் ஷராப் (வயது 3). இன்று (03.11.2019) மாலை கோபால் தனது மகனை அழைத்துக் கொண்டு கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அங்கிருந்து வீடு திரும்பும்போது, கொருக்குப்பேட்டை, மீனம்பாள் நகர் பாலத்தின் மேல் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சா நூல் பைக்கின் முன்பகுதியில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த அபிநவ் கழுத்தில் சிக்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் கழுத்தை அறுத்துள்ளது. இதைச் சற்றும் எதிர்பாராத கோபால் பைக்கை நிறுத்தி விட்டு கதறித் துடித்துள்ளார். மகனை மீட்குமாறு கண்ணீர் சிந்தினார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ஆர்.கே.நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீஸார் அபினேஷ்வரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அபிநவ்வைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தந்தை கண் எதிரே 3 வயது மகன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட 2015-ம் ஆண்டு முதல் தடை உள்ளது. மாஞ்சா நூல் பட்டம் விற்பவர்கள், வாங்குபவர்கள் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்தநிலையில் சென்னையில் மாஞ்சா நூல் விற்பனையைத் தடுக்காததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நேரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
3 வயது குழந்தை அபிநவ் மரணத்துக்குக் காரணமான மாஞ்சா நூல் பட்டம் விட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.