

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என தமாகாவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி.கே.வாசன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி இளங்கோவனுக்கு எதிராக சில இடங்களில் தமாகாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறிய சில வார்த்தைகள் மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வார்த்தைகளை மிக கவனமாகப் பேச வேண்டும். மற்ற கட்சித் தலைவர்களையும், அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் வரம்பு மீறிய வார்த்தைகளால், மனம் புண்படும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல.
அரசியல் வேறுபாடுகள், வேறுபட்ட கொள்கைகள் தனி மனித தாக்குதலுக்கு வழிவகுக்கக் கூடாது. தலைவர்கள் மற்றும் கட்சிகளின் செயல்பாடுகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். என்னைப் பற்றி இளங்கோவன் தெரிவித்த வார்த்தைகளுக்காக அவருக்கு எதிராக தமாகா தொண்டர்கள் யாரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். அதற்குப் பதிலாக மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். கட்சி அலுவலகம், தலைவர்களது வீடுகளை முற்றுகையிடுவது போன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும்'' என்று வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.