திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் 
Updated on
1 min read

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கந்த சஷ்டி விழா வில் சூரசம்ஹாரம் நேற்று நடை பெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்து டன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

இவ்விழா கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி யது. கடந்த 6 நாட்களாக தினமும் யாகசாலை பூஜை, சுவாமி ஜெயந்தி நாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, சண்முகவிலாசம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தங்க ரதத்தில் சுவாமி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சூரசம்ஹார விழாவான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.

பின்னர், யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

சூரசம்ஹாரம்

மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு கடற்கரைக்கு வந்தார். அங்கு சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில் கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு 3 முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 5.10 மணிக்கு ஜெயந்திநாதர் வதம் செய்தார்.

இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.28 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடன் போரிட்ட சூரபத்மனை 5.45 மணிக்கும் சுவாமி வதம் செய்தார். பின்னர், மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி ஜெயந்திநாதர் தன்னுள் ஆட்கொண்டார். அப்போது பக்தர்கள் எழுப்பிய `வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷம் விண்ணை எட்டியது.

விரதம் நிறைவு

சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். கடற்கரை முழுவதும் மனிதத் தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரத்துக்கு பின்னர் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. தேவியருடன், சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.

விழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் செ.ராஜு, கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித், தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருக்கல்யாணத் திருவிழா இன்று (நவ.3) நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in