Published : 02 Nov 2019 07:22 PM
Last Updated : 02 Nov 2019 07:22 PM

நிர்பயா வழக்கைவிட பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது; தமிழக அரசு அலட்சியம்:  கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை

டெல்லியை உலுக்கிய நிர்பயா வழக்கைவிட பொள்ளாச்சி பாலியல் வழக்கு முக்கியமானது. அதில் சிக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்திலிருந்து தப்பும் வகையில் தமிழக அரசு செயல்பட்டதை மன்னிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''தமிழக அரசு சமுக நீதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்பது இந்தியாவை புரட்டிப் போட்ட வழக்கு. இதில் ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டுள்ளனர். அதற்காக, கைது செய்தவர்களின் குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்யும் விதத்தில் செயல்பட்டது மாபெரும் குற்றமாகும். இதனை மன்னிக்க முடியாது.

நிர்பயா வழக்கை விட இந்த வழக்கு மிகவும் முக்கியமானது. அதில் ஒரு பெண். இதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், முக்கியமான பிற நபர்களின் குடும்பங்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த வழக்கை ரத்து செய்ததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

புதிய கல்விக் கொள்கை என்பது தரம், தகுதி என்ற ஒரு வார்த்தையை வைத்து சமூக நீதியைச் சீர்குலைக்கிறது. சாதாரண ஒரு கூலித் தொழிலாளியின் மகன் கல்வி பயிலும் நிலை தற்போது உள்ளது. ஆனால் 5,8,9,10,11,12 ஆகிய ஒவ்வொரு வகுப்புக்கும் பொதுத்தேர்வு வைத்தால் அவர்கள் படிப்பை விட்டு மீண்டும் சுய தொழிலுக்குச் செல்லக்கூடிய நிலைதான் வரும்.

மருத்துவர்களின் போராட்டத்தில் அவர்கள் வைத்த கோரிக்கையில் ஒரு அரசாங்கம் எதையெல்லாம் செய்ய வேண்டுமோ? அதையெல்லாம் செய்திருக்க வேண்டும். மருத்துவர்கள் முறையாகப் போராட்டம் நடத்தினார்கள். மற்றொரு புறம் மருத்துவமனை இயங்கி வந்தது. ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது, உரிமைக்காகக் குரல் கொடுப்பது என்பது சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைக் கெடுக்க நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

துணை முதல்வர் ஓபிஎஸ் வெளிநாடு பயணம் போய் வரட்டும் என வாழ்த்துகள் தெரிவிக்கிறோம். அதேபோன்று அரசியல் ரீதியாக ரஜினியின் கருத்தும் எங்களின் கருத்தும் வேறுபாடாக இருக்கலாம். ஆனால், ரஜினி மத்திய அரசு அளிக்கும் விருதுக்குத் தகுதியானவர். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவருக்கு எந்த வகையான உயர்வு வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x