

சென்னை
சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் திமுக மாவட்டச்செயலாளர் மா.சுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
இது சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் புகாரின்மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு முகாந்திரம் இருந்தால் போலீஸார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, மா.சுப்ரமணியனும், அவரது மனைவியும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையில் மா.சுப்பிரமணியன் தரப்பில் அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
காவல்துறை தரப்பில், மனுதாரர்கள் போலி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளனர் என்றும், அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் விதிகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது”
புகார் தாரரான பார்த்திபன் தரப்பில், மேயராக இருந்த மா.சுப்பிரமணியம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக விதிகளுக்குப் புறம்பாக அரசு நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி முன் ஜாமீன் வழங்கப்பட்டது. தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் அவரது மனைவி இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு வருமாறு:
“பார்த்திபன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி கிண்டி சிட்கோவிற்கு சொந்தமான இரண்டு தொழிலாளர் குடியிருப்புகளை சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமித்ததாக கடந்த ஜூன் மாதம் 3 -ம் தேதி (3/6/2019) கிண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. புலன் விசாரணை முடிந்து நவம்பர் 2-ம் தேதி (இன்று) மா.சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மீது 1.பொய் ஆவணம் புனைந்து மோசடி செய்தல், 2.ஏமாற்றுதல், 3.கூட்டுச்சதி ஆகிய தண்டனைச் சட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சைதாப்பேட்டை, 11வது பெரு நகர குற்றவியல் நடுவர் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது”.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.