பொள்ளாச்சி விவகாரம்: குண்டர் சட்டத்தை நாங்களா ரத்து செய்தோம்?- ரத்து செய்தவர்களை கேளுங்கள் : ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

பொள்ளாச்சி விவகாரம்: குண்டர் சட்டத்தை நாங்களா ரத்து செய்தோம்?- ரத்து செய்தவர்களை கேளுங்கள் : ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்
Updated on
2 min read

சென்னை

பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை, ஸ்டாலின் கேள்வி கேட்க வேண்டியது குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிமன்றத்தை தான், அரசை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இரண்டுபேரின் தாயார் தொடுத்த வழக்கில் உரிய ஆவணங்களை உறவினர்களுக்கு அளிக்கவில்லை, ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என உயர் நீதிமன்றம் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதுகுறித்து விமர்சனம் செய்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின்,

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களுக்குத் திரைமறைவில் வாய்மொழி உத்தரவிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

அ.தி.மு.க. அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், தமிழகத்தையே அதிர்ச்சிக்கும் அருவருப்புக்கும் உள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரின் மீதான குண்டர் சட்டம் ரத்தாகியிருக்கிறது.

இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த கயவர்கள் அனைவரும், சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு , கடுமையான தண்டனை பெற்றுத் தரப்பட வேண்டும்" என குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து சென்னை போரூரில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது.

புயல் காரணமாக நடுக்கடலில் சிக்கி தவித்த அனைத்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். மருத்துவர்கள் போராட்டத்தில் அரசு கோரிக்கையை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சி. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கும். அரசு நிதிசுமையில் இருக்கிறது என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்”. என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களில் நடித்து வருவதால், சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்த கேள்விக்கு, ஆன்லைன் வர்த்தகத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் மத்திய அரசுக்கு இது தொடர்பாக வலியுறுத்த அரசு தயாராக உள்ளது என்றும் சிறு வியாபாரிகள் பாதிக்காத வகையில் அரசு எப்போதும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்று துரைமுருகன் கூறிய கருத்துக்கு பதில் அளித்த ஜெயக்குமார், வேலூர் தேர்தலில் தன் மகனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பணத்தை வாரி வழங்கியவர் அவர். பணத்தை மட்டுமே திமுக நம்பியுள்ளது. ஆனால் அதிமுக மக்களை மட்டும் தான் நம்பி இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் திமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை.திமுகவால் தமிழகத்திற்கு பட்டை நாமம் தான் கிடைத்தது என்றார்.

மத்திய அரசு சார்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி, என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை, தவறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது அரசு. ஆனால் அதனை நீதிமன்றம் தான் ரத்து செய்துள்ளது. எனவே ஸ்டாலின் கேள்வி கேட்க வேண்டியது நீதிமன்றத்தை தானே தவிர அரசை இல்லை,

என்று பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in