Published : 02 Nov 2019 02:38 PM
Last Updated : 02 Nov 2019 02:38 PM

கோயம்பேடு வந்த அரசுப் பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துநர் பலி; 13 பேர் படுகாயம்: ஷிப்ட் முறையில் மாற்றம் கோரி ஊழியர்கள் குமுறல்

சென்னை

ஆந்திர மாநிலத்திலிருந்து நெல்லூர் நோக்கி வந்த அரசுப்பேருந்து கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் ஷிப்ட் முறை உள்ளதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இன்று அதிகாலை தாதான்குப்பம் ரயில்வே மேம்பால சாலையில் பாடி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது, அப்போது பின்னால் ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து அரசுப்பேருந்து ஒன்று வந்துக்கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து வேகமாக கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம்போல் நொறுங்கியது. ஓட்டுனரின் இரண்டு கால்களும் துண்டானது. முன்பக்கம் அமர்ந்திருந்த கண்டக்டர் வீரமுத்துவுக்கு தலை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பயணிகள் 12 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கமிருந்தவர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே பேருந்தின் கண்டக்டர் வீரமுத்து உயிரிழந்தார். மற்ற 13 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்பட்டவுடன் லாரி ஓட்டுநர் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லூரில் இருந்து ஓய்வில்லாமல் ஓட்டிவந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கோயம்பேடு செல்ல சில கிலோ மீட்டர்களே உள்ள நிலையில் தூக்கக் கலக்கத்தில் முன்னால் சென்ற லாரிமீது மோதியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த கண்டக்டர் வீரமுத்துவின் அண்ணன் மகன் கூறுகையில் தீபாவளிக்குக்கூட வீட்டுக்கு வராமல் சித்தப்பா பணியில் தொடர்ச்சியாக பணியாற்றினார். அவருக்கு ஒரே மகன் தற்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருக்கிறார். அவரை நம்பித்தான் குடும்பமே உள்ளது இனி என் சித்தப்பாவின் குடும்பத்தை யார் கவனிப்பார்கள் என கவலையுடன் தெரிவித்தார்.

அங்கிருந்த ஊழியர்கள் தனியார் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள ஷிப்ட் முறையால் ஊழியர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு ஷிப்டுக்கும் இடையில் ஓய்வு இருக்கும் ஆனால் அதை மாற்றிவிட்டு தொடர்ச்சியாக ஒட்டச்சொல்கிறார்கள்.

ஒரு ஓட்டுநர் 750 கிலோமீட்டர் வரைகூட ஓய்வில்லாமல் ஓட்டுகிறார். 4 டிரிப் தொடர்ச்சியாக ஓட்டும் நிலை உள்ளது. மூன்று டிரிப் சென்றுவிட்டு 4 வது டிரிப் வரும்போது ஓய்வில்லாமல் ஓட்டினால் என்ன ஆகும். இந்த மரணத்தோடு இதற்கு முடிவு வரட்டும் இனிமேலாவது பழைய ஷிப்ட் முறை வேண்டும் என தெரிவித்தனர்.

உயிரிழந்த கண்டக்டர் வீரமுத்துவின் குடும்ப நிலையை கணக்கில்கொண்டு அவரது ஒரே மகனுக்கு அரசு வேலை அல்லது போக்குவரத்துக் கழகத்தில் பணி வழங்கவேண்டும் என ஊழியர்கள் சிலர் தெர்வித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x