நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக அரசு உடனடியாக நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்கு பிறகு, பாசன வசதிக்காக அணைகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகள் புதியதாக உருவாக்கவில்லை என்றாலும், ஏற்கனவே இருப்பதையாவது பராமரித்து பாதுகாக்கவேண்டும் என்கின்ற தொலைநோக்குப்பார்வை தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

ஏரிகள், குளங்கள், ஓடைகள் போன்ற நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற செய்திகள் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டும், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் பலவழக்குகளில் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக தெரியவில்லை.

1958ஆம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் அண்ணா பல்கலைக்கழக பொறியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருந்த வைகை அணையின் நீர்தேக்க பகுதி ஆறாயிரம் சதுரகிலோமீட்டராக குறைந்து, 71 அடி உயரம் நீர்மட்டம் இருக்கவேண்டிய இடத்தில் சுமார் 24 அடி வரை சேறும், சகதியும், வண்டல்மண்ணும் படிந்து, மூன்றில் ஒருபங்கு அளவிற்கு நீர்தேக்க அளவு குறைந்துள்ளதாகவும், வைகை அணை தூர்வாரப்பட்டால் சுமார் 1500 மில்லியன் கனஅடிநீர் கூடுதலாக தேக்கமுடியும் என அந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை 120அடிவரை நீரை தேக்கமுடியும் என்றாலும் சுமார் 25 அடிவரை சேறும், சகதியும், வண்டல்மண்ணும் படிந்து, சுமார் 20 டிஎம்சி நீரை தேக்கமுடியாத நிலை உள்ளது.

1873ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை 100 ஆண்டுகளுக்குமேல் பழமையானது. 8 அடி உயரம் நீரை தேக்கி வைக்கவேண்டிய அணையில் தற்போது ஒரு அடி அளவிற்குதான் நீரை தேக்கி வைக்கமுடிகிறது. வேலிகாத்தானும், அமலைசெடிகளும், மண்ணும், மணலும் குவிந்து ஸ்ரீவைகுண்டம் அணையின் நீர்தேக்கும்பகுதி சமதளமான நிலபரப்புபோல் மாறியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தமிழக அரசு அதை முழுமையாக நிறைவேற்றாமல் பெயரளவில் தூர்வாரும் பணியை செய்துவருகிறது. இது தீர்ப்பாயத்தை மட்டுமல்ல பொதுமக்களின் நம்பிக்கையையும் சிதைத்து வருகிறது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியும் செவி மடுக்காது மெத்தனமாக இருக்கும் அதிமுக அரசு, வைகை மற்றும் மேட்டூர் அணையை தூர்வார உத்தரவிடுமா? தமிழகத்திலுள்ள ஆற்றுமணலை, மணல்மாபியாக்களுக்கு தாரைவார்த்து நிலத்தடி நீர்மட்டத்தையே இல்லாமல் செய்ததுபோல், வண்டல் மண்ணையும் அவர்களுக்கு தாரைவார்க்காமல் அணைகளை உடனடியாக தூர்வாரவேண்டும்.

தமிழக அரசிடம் தூர்வார நிதி இல்லை என்றாலும், அரசு அனுமதி அளித்தால், தமிழக விவசாயிகளே அணையில் உள்ள வண்டல்மண்ணை எடுத்து அவரவர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு உடனடியாக நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in