

ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையிலுள்ள பள்ளி வாசல்களில் நேற்று நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
ரமலான் மாதத்தில் நோன்பி ருப்பது இஸ்லாமியர்களின் ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகும். இதற்காக இஸ்லாமியர்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நோன்பிருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன் தினம் ஷவ்வால் பிறை தெரிந்ததால் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. தமிழகத்திலுள்ள முக்கிய பள்ளிவாசல்களில் நேற்று சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன. ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சென்னையிலுள்ள முக்கிய பள்ளிவாசல்களிலும் நேற்று சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல், சென்னை தீவுத்திடல், சென்னை அண்ணா சாலை மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை நடந்த சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாரிமுனை டான் பாஸ்கோ பள்ளி மைதானத்திலும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கல்லூரி அருகேயுள்ள மோகனன் பள்ளியிலும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டன.
தொழுகை முடிந்த பிறகு இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஏழை எளியோருக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.