Published : 02 Nov 2019 07:47 AM
Last Updated : 02 Nov 2019 07:47 AM

நெல்லை, தூத்துக்குடியில் தாமிரபரணி அந்த்ய புஷ்கர விழா தொடக்கம்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

திருநெல்வேலி

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி அந்த்ய புஷ்கர விழா நேற்று தொடங்கியது. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.

தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் கொண்டாடப்பட்டது. தற்போது, குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்ந்ததை முன்னிட்டு, தாமிரபரணி அந்த்ய புஷ்கரம் நிறைவு விழா, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி கரையோர தீர்த்தக் கட்டங்களில் நேற்று தொடங்கியது. வரும் 6-ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.

அம்பாசமுத்திரம் அருகே திருப்புடைமருதூர் புடார்ஜுன ஷேத்திரம் சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில் வரும் 6-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள், சந்திரமவுலீஸ்வரர் பூஜை, சங்கல்ப ஸ்நானம், நதி பூஜை, தாமிரபரணி நதி ஆரத்தி ஆகியவை நடைபெறுகின்றன. இங்கு, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று காலை பூஜைகள் செய்தார். ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமடம் சுந்தரேச ஐயர், நாராயணன், ஜெயந்திரன் மணி, உஷாராமன் செய்திருந்தனர்.

குறுக்குத்துறை

திருநெல்வேலி குறுக்குத்துறை தீர்த்தக் கட்டத்தில் நடைபெற்ற விழாவிலும் ஸ்ரீவிஜயேந்திர சுவாமிகள் பங்கேற்றார். ஏற்பாடுகளை மகாலெட்சுமி டிரஸ்ட் சேர்மன் மகாலெட்சுமி சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செங்கோல் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் பங்கேற்றனர்.

தைப்பூச படித்துறை

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச படித்துறையில் நேற்று நடைபெற்ற பூஜைகளில் சைவ, வைணவ மடாதிபதிகள் பங்கேற்றனர். இதுதவிர ஜடாயு தீர்த்தம், மணிமூர்த்தீஸ்வரம் தீர்த்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு, அகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் புஷ்கர நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நீராட படித்துறைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x