Published : 02 Nov 2019 06:56 AM
Last Updated : 02 Nov 2019 06:56 AM

ஜெர்மனி அரசு அருங்காட்சியகத்துக்கு ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

சென்னை

ஜெர்மனியில் உள்ள லிண்டன் அரசு அருங்காட்சியகத்துக்கு 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் அனுப்பப்பட உள்ளதாக தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில், ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட உள்ளன. இதில் முதலாவதாக, ஜெர்மனியின் பாடன் உட்டன்பெர்க் மாநிலத்தில், ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள லிண்டன் அரசு அருங்காட்சியகத்தில் 2 திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளில் நின்ற கோலத்தில் உள்ள சிலை வரும் டிசம்பர் 4-ம் தேதி அங்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படுகிறது.

ஒரு சிலை மூன்றரை அடி உயரம், 40 கிலோ எடையுடன் நின்ற கோலத்தில் தமிழ் மரபுப்படி தோளில் துண்டு அணிந்துள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலை, ஒன்றே முக்கால் அடி உயரமும், 35 கிலோ எடையுடனும் அமர்ந்த கோலத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

நின்ற கோலத்தில் உள்ள திருவள் ளுவர் சிலையை தலைமைச் செயல கத்தில் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று திறந்து வைத்து, வழியனுப்புவதற் கான ஏற்பாடுகளை தொடங்கி வைத் தார். அப்போது அவர் கூறியதாவது:

ஐரோப்பிய நாடுகளில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள் இல்லை. தற்போது ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்தச் சிலைகள் வைக்கப்பட உள்ளன. அருங்காட்சியகங்கள் தவிர கலைக் கூடங்கள் மற்றும் கண்காட்சிகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவ தமிழ் பண்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது விஜிபி நிறுவனம் சார்பில் பிளாஸ்டர் ஆப் பாரீசில் உருவாக்கப்பட்ட 50 திருவள் ளுவர் சிலைகள் பல நாடுகளுககு அனுப்பப்பட்டு வருகின்றன.

ஜெர்மனிக்கு அனுப்பப்படும் இந்த சிலையுடன், லேசர் மூலம் திருக்குறள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடியும் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அமர்ந்த நிலையில் உள்ள சிலை, இங்கு ஆட்சியராக இருந்த எல்லிஸ் வெளியிட்ட தங்க நாணயத்தில் இருந்த திருவள்ளுவர் உருவம் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளை ஜெர்மனிக்கு அனுப்புவதற்கான செலவுகளை தமிழ் வளர்ச்சித் துறை ஏற்றுள்ளது. திருக்குறள் இதுவரை 89 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

திருக்குறளை உலக பொது நூலாக அறிவிக்க யுனெஸ்கோவிடம் நாங்கள் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய அளவிலும் திருக்குறளை பொது நூலாக அறிவிக்குமாறு மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இதற்காக தமிழக முதல்வர் ரூ.10 லட்சம் ஒதுக்கியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மகேசன் காசிராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி கனகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x