Published : 01 Nov 2019 08:13 PM
Last Updated : 01 Nov 2019 08:13 PM

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் கஞ்சா நபர்கள் அட்டகாசம்: காதலியைக் காப்பாற்றப் போராடி  ஆற்றில் வீசப்பட்ட இளைஞர் உடல் 3 நாட்களுக்குப் பின் மீட்பு

திருச்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் காதலியிடம் வம்பு செய்த கஞ்சா போதை நபர்களுடன் போராடிய காதலன் ஆற்றில் வீசப்பட்டார். 3 நாள் தேடலுக்குப்பின் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

துறையூரைச் சேர்ந்தவர் ஜீவித்(24). இவரும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனியே சந்திப்பது வழக்கம். வழக்கம்போல் கடந்த 30-ம் தேதி சமயபுரம் டோல்கேட் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகில் 5 பேர் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர்.

கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் ஜீவித்தும் அவரது காதலியும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து வம்பு செய்துள்ளனர். எதற்கு பிரச்சினை என்று காதலியுடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார் ஜீவித். ஆனால் அந்த கும்பல் திடீரென அவர்களை சுற்றி வளைத்து காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவித் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜீவித்தை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த நேரத்தில் உதவி கேட்டு காதலி பக்கத்தில் உள்ள மீனவர்களை நோக்கி ஓடியுள்ளார். அதற்குள் ஜீவித்தை தாக்கிய கும்பல் அவரை தூக்கி வெள்ளம் கரைபுரண்டோடும் கொள்ளிடம் ஆற்றில் வீசியுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த காதலி அங்குள்ள மீனவர்களிடம் விஷயத்தைச் சொல்ல அவர்கள் ஓடிவந்தபோது 5 பேரும் தப்பிக்க முயல் 2 பேர் மட்டும் சிக்கிக் கொண்டனர். அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர்.

தண்ணீரில் மூழ்கிய ஜீவித்தை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டனர். ரப்பர் படகுமூலம் தேடும்பணி நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி, நவல்பட்டு 3 பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடினர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் அருகே திருப்பராய்த்துறை கொள்ளிடம் ஆற்றில் மாணவர் ஜீவித் உடல் மீட்கப்பட்டது.

கஞ்சா போதை நபர்களால் அநியாயமாக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அப்பகுதியில் எப்போதும் கஞ்சா விற்பனை, கும்பலாக கஞ்சா அடிப்பது உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x