

புதுவையில் ஆம்புலன்ஸ் தராததால் செங்கல்களை ஏற்றும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றார். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். வழியெங்கும் உதவி எதுவும் செய்யாத வாகன ஓட்டிகள் மனிதாபிமானமற்ற முறையில் புகைப்படம் எடுப்பதில் மட்டுமே குறியாக இருந்துள்ளனர்.
உடல் நலம் பாதித்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்காக இந்தியா முழுதும் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லும் ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் அவர்ஸ் என்பார்கள். வழியில் அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஆம்புலன்ஸில் ஒரு மருத்துவ உதவியாளர் உபகரணமும் இருக்கும்.
அத்தனை வசதிகள் இருந்தும் மாநில எல்லைப் பிரச்சினை காரணமாக ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் சிகிச்சைக்கு தள்ளுவண்டியில் கொண்டுச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இது வட நாட்டில் நடக்கவில்லை தமிழக புதுவை எல்லையில் நடந்துள்ளது.
தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். சிறிதுகாலமாக உடல் நலம் பாதித்த நிலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட அவரது தங்கை விழுப்புரத்திலிருந்து அண்ணனைப் பார்க்கவந்தார்.
அவரது உடல் நிலையைப் பார்த்து பதறிப்போய் பக்கத்தில் 4 கி.மீ.தொலைவில் உள்ள புதுவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஆம்புலன்ஸ் கேட்டபோது செங்கல் சூளை தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வேறு வழியில்லாத நிலையில் கையில் பணமும் இல்லாத நிலையில் செங்கல் சூளையில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் அண்ணனை படுக்க வைத்து உடன் வேலைச் செய்யும் நபர் ஒருவரை அழைத்துக்கொண்டு தானே தள்ளுவண்டியை இழுத்துச் சென்றுள்ளார் . வழியெங்கும் அவரைக்கடந்துச் சென்ற வாகன ஓட்டிகள் யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் அதை புகைப்படமும் வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
4 கிலோ மீட்டர் கடந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் ஒருவேளை அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம், அல்லது செல்லும் வழியில் ஏதாவது வாகன ஓட்டிகள் உதவியிருந்தாலும் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
மனிதாபிமானமற்ற முறையில் ஆம்புலன்ஸ் தர மறுத்த மாவட்ட சுகாதார மையத்திற்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளிக்கலாம் ஆனால் போன உயிர் திரும்பப்போவதில்லை. நடந்ததைக் கேள்விப்பட்ட புதுவை காவல்துறையினர் உயிரிழந்த சுப்ரமணியின் உடலை சொந்த ஊரான விழுப்புரம் கொண்டுச் செல்ல இலவசமாக வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.