Last Updated : 01 Nov, 2019 04:58 PM

 

Published : 01 Nov 2019 04:58 PM
Last Updated : 01 Nov 2019 04:58 PM

திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது தொடர்பாக வட்டார வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ துறைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. அறிவுறுத்தினார்.

விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை முறைகள் குறித்து விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று (நவம்பர் 1) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து மருத்துவ வசதிகள் குறித்தும், முறையாக மருத்துவம் பார்க்கப்படுகிறதா என்பது குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளையும் பார்வையிட்டு சிகிச்சை முறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினந்தோறும் சுமார் 1,500 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

குறிப்பாக விபத்து, பாம்புகடி, பூச்சி மருந்து குடித்தது என பல்வேறு வகையான நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். குழந்தைகள் வார்டில் பார்த்தபோது நரிக்குடி, திருச்சுழி போன்ற பகுதிகளிலிருந்து ஊட்டச் சத்து குறைபாடுகளுடன் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனர். காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாம்புக் கடியாலும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். பாம்பு கடிக்கு இங்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது பருமழை தொடங்கியுள்ள நிலையில் மருத்துவத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகள் இணைந்து தொற்று நோய் தாக்குதலிலிருந்து மக்களைக் காக்க விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும், எந்த பகுதியில் எந்த விதமான நோய் தொற்று அதிகம் உள்ளது என்பது குறித்தும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்தும் வட்டார வாரியாக திட்ட அறிக்கை தயாரித்து கொடுக்குமாறு மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்வோம் என தமிழக முதல்வர் கூறியது வருத்தத்திற்குரியது.

மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் மருத்துவ திடக்கழிவுகளை கையாளுவதில் நகராட்சி நிர்வாகமும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாமல் பலர் விருதுநகர் வருகின்றனர். அமைச்சர் தொகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாதது வேதனைக்குரியது. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்.

சுஜித் மரணத்தில் நிறைய பாடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரை அரசு மூலம் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை, இதுவரை மூடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
பயன்பாடில்லாமல் மூடப்படாத அனைத்து ஆழ்துளை கிணறுகளும் உடனடியாக மூடப்பட வேண்டும்.

ப.சிதம்பரம் மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தை பழிவாங்கும் அமித்ஷாவின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும். விரைவில் ப.சிதம்பரம் வெளியே வருவார்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x