Published : 01 Nov 2019 04:05 PM
Last Updated : 01 Nov 2019 04:05 PM

ஆழ்வார்பேட்டையில் பரிதாபம் ; மனநலம் குன்றிய மகனை கொலை செய்த தந்தை  தற்கொலைக்கு முயற்சி 

சென்னை

ஆழ்வார்பேட்டையில் மனநலம் குன்றிய மகனை கவனிக்க முடியாத விரக்தியில் மகனைக்கொன்று தற்கொலைக்கு முயன்று 3 நாட்களாக உயிருக்கு போராடிய தந்தை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

பெற்றோரின் லட்சியம் தனது பிள்ளைகள் நல்லபடியாக படித்து, வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும், திருமணம் செய்து அழகுப் பார்க்கவேண்டும், கடைசி காலத்தில் தன்னை காப்பாற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அது எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. சிலருக்கு பெற்ற பிள்ளைகளே பாரமாகி கடைசி காலம்வரை பார்த்துக்கொள்ளும் நிலை ஏற்படும்.

உடல் ஊனத்துடன் பிறக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு வாழ்நாள் முழுதும் வேதனையை அளிக்கும் நிகழ்வு. ஊனத்தை வென்று சாதனை படைக்கும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் மனநலம் குன்றிய பிள்ளைகளை வைத்துள்ள பெற்றோரின் வேதனை தனிப்பட்ட சோகம்.

அவர்கள் என்ன வளர்ந்தாலும் குழந்தைகள்தான், அவர்களது அனைத்து தேவைகளையும் பார்த்துக் கொள்ளவேண்டும்.எங்கும் அழைத்துச் செல்ல முடியாது. இதுபோன்ற வேதனையுடன் முதுமையின் காரணமாக தன்னையே இன்னொருவர் பராமரிக்கவேண்டிய நிலையில் தான் தனது பிள்ளையை பராமரிக்கவேண்டும் என்கிற நிலையில் உள்ள வயதான பெற்றோர் அடையும் மனவேதனை அதிகம்.

இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த தந்தை ஒருவர் 82 வயதான தான் 44 வயதான மன நலம் குன்றிய மகனை பராமரிக்க முடியாமல் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்து செயல்பட்டதில் மகன் உயிரிழந்தார்.

இந்த சோகச் சம்பவம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நடந்துள்ளது. தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள் வரும் ஆழ்வார்ப்பேட்டை திரிவேணி அபார்ட்மெண்டில் வசிப்பவர் விஸ்வநாதன் (82).இவர் இவர் சாஸ்திரிபவனில் சுருக்கெழுத்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ரமேஷ் (44) என்கிற மகன் உள்ளார்.

ரமேஷ் பிறந்ததிலிருந்தே மனநலம் குன்றிய குழந்தையாக இருந்துள்ளார். பல வைத்தியம் பார்த்தும் சரியாகவில்லை. மனைவி இருந்தவரை மகனை அவர் பார்த்துக்கொண்டார். பெற்றோருக்கு வேதனை தரும் நிகழ்வாக அது இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதனின் மனைவி மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்குப்பின் விஸ்வநாதன் தனிமரமானார். விஸ்வாநாதனும் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ரமேஷும் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

மகனை மனைவியின் மரணத்திற்குப்பின் 15 ஆண்டுகளாக பராமரித்துவந்த விஸ்வநாதனுக்கு தற்போது 82 வயதாகும் நிலையில் வயோதிகம் காரணமாக உடல் இயலாமை, மகனை பராமரிக்க முடியாத நிலை ஆகியவை சேர்ந்து மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது.

தான் திடீரென மரணமடைந்தால் தனது மகனை யார் பார்த்துக்கொள்வார்கள் என்கிற பயமும் , விரக்தியும் அவரை வாட்டியுள்ளது. இதையடுத்து அவர் தனது மகனை கருணைக்கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்வது என முடிவெடுத்துள்ளார்.

கடந்த 28-ம் தேதி தூக்க மாத்திரைகளை அதிக அளவில் வங்கிவந்த அவர் அதை மகனுக்கு உணவில் கலந்துகொடுத்துள்ளார். பின்னர் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தங்களது மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துவிட்டு தானும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்துள்ளார்.

தூக்கமாத்திரைகளை அதிக அளவில் உண்டதால் மகன் ரமேஷ் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் விஸ்வநாதன் உயிர் பிரியாமல் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இப்படியே இரண்டு நாட்கள் சென்றுள்ளது. மகனின் அழுகிய உடலுடன் வீட்டுக்குள் படுக்கையில் விஸ்வநாதன் கிடந்துள்ளார்.

விஸ்வநாதன் வீடு பூட்டியிருந்ததால் அவர் எங்காவது வெளியூர் போயிருக்கலாம் என்று நினைத்த அக்கம்பக்கத்தினர் மூன்றாம் நாளான நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிலிருந்து துர்நற்றம் வீசுவதை அடுத்து சந்தேகமடைந்தனர். உடனடியாக தேனாம்பேட்டை போலீஸுக்கு தகவல் அளிக்க அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

அங்கு கட்டிலில் மகன் ரமேஷ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததும், பக்கத்தில் மயக்க நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் விஸ்வநாதன் கிடந்ததையும் பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் ரமேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

மகனை கொலை செய்த தந்தை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்ற சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் இரண்டு இடத்தில் நடந்துள்ளது.

திருவொற்றியூர் மாணிக்கம் நகர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மனநலம் பாதித்த மகன் முகமது உசேனை தங்களுக்குப் பின்னால் கவனிப்பதற்கு ஆள் இருக்காது என்ற எண்ணத்தில் தந்தை நவாசுதீன் கழுத்தறுத்துக் கொன்றார்.

இதே போன்று கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோயம்பேட்டைச் சேர்ந்த ஆதிகேசவன். என்பவர் மனைவி மோகனாவை பிரிந்து மகனுடன் வாழ. இவர்களது மன நலம் பாதிக்கப்பட்ட மகள் கவுசல்யாவை கவனித்து வந்த தாய் பராமரிப்பு செலவை ஆதிகேசவன் தராததால் வீட்டு வாசலில் மகளை விட்டுவிட்டு காணாமல் போனார்.

அடிக்கடி வலிப்பு வரும் மகளை காணசகிக்காமல் பராமரிக்க முடியாத விரக்தியில் தனது மன நலம் பாதித்த , 19 வயது மகளை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். முதுமையும் விரக்தியும் பாசமுள்ள பெற்றோரையும் பிள்ளைகளை கொல்லும் அளவுக்கு குற்றவாளிகளாக்குகிறது. இந்த சம்பவத்திலும் அது நிகழ்ந்துள்ளது வருத்தத்துக்குரிய ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x