Published : 01 Nov 2019 03:54 PM
Last Updated : 01 Nov 2019 03:54 PM

தமிழ்நாடு நாள்: மகிழ்ச்சியான நாள்; கட்சி பாகுபாடின்றி கொண்டாடுக; கே.எஸ்.அழகிரி

சென்னை

தமிழர்கள் அனைவரும் கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது சிறப்பானது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.1) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்க எடுத்த முடிவின்படி, 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி சென்னை மாகாணத்தில் இருந்து தமிழ்நாடு உருவானதை தமிழ்நாடு நாள் என்று பள்ளி, கல்லூரிகளில் கொண்டாடுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று விடுதலைப் போராட்ட காலத்திலேயே தீவிர முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. 1946 ஆம் ஆண்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இது வலியுறுத்தப்பட்டுள்ளது. காந்தி தலைமையிலான காங்கிரஸ், பல மொழிகளை பேசுகிற தனித்தனி குழுக்களைக் கொண்ட ஒரு தேசமாக இந்தியாவை பார்த்தது. 1922 ஆம் ஆண்டிலேயே மாகாண காங்கிரஸ் அமைப்புகளை மொழி அடிப்படையில் உருவாக்குவதென காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

அன்று சென்னை ராஜதானி ஒரே அமைப்பாக இருந்த போதும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி, கர்நாடக காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி என பிரித்து, மொழி உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து, மாகாண அமைப்புகளை உருவாக்கிய பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. மாநிலங்களில் பிராந்திய மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்ற தீர்மானம் 1925 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து சென்னை மாகாண சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தை முதன் முறையாக நிதியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் தமிழில் சமர்ப்பித்து சாதனை படைத்தார். 27.12.1956 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவை காமராஜர் முதல்வராக இருந்த போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேநேரத்தில், சுதந்திரப் போராட்டத்தில் இருந்த நிலைமை மாறி, நாடு துண்டாடப்பட்டதற்குப் பிந்தைய நிலையில் குழப்பவாத சக்திகள் முன்னிலைக்கு வந்துவிட்டன என்றும், அவற்றை தடுக்க இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் பிரதமர் நேரு கருதினார். இச்சூழலில், மாநில எல்லைகளை மறுசீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலிமை பெற்றது.

இப்பிரச்சினையை ஆராய்வதற்காக ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமய்யா ஆகியோர் அடங்கிய புது குழு அமைக்கப்பட்டது. ஜேவிபி குழு என்று அழைக்கப்பட்ட அக்குழு, இந்தியாவை ஒன்றுபடுத்துகிற முயற்சிக்கு எதிராக சில மாநிலங்கள் பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், தனி ஆந்திர மாநிலத்தை உருவாக்க வேண்டுமென்று கோரி, 1952 இல் 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீராமுலு என்ற சுதந்திரப் போராட்ட தியாகி உயிரிழந்ததும் ஆந்திராவில் வெடித்த கலவரங்களும், போராட்டங்களும் அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு அரசை தள்ளின. தீவிரமாக, போராட்டங்கள் தொடங்கியதால் 1953 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புக் குழுவை பிரதமர் நேரு நியமித்தார்.

அந்தக் குழு பரிந்துரைத்தபடி 14 மாநிலங்களையும், 6 யூனியன் பிரதேசங்களையும் ஏற்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

பம்பாய் மாகாணத்தை மராத்தி மொழி பேசும் மக்களுக்காக மகாராஷ்டிரா என்றும், குஜராத்தி மொழி கொண்ட பகுதியை குஜராத் என்ற பகுதியாகவும் பிரித்தாக வேண்டுமென்ற கோரிக்கையை மத்திய காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டது. 1960 ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது. எனவே, மொழிவழி மாநிலங்கள் அமைக்க வேண்டும் என்பது விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து வலிமை பெற்ற கருத்து, 1956 நவம்பர் 1 அன்று மதராஸ் மாநிலம் உருவாக்கப்பட்டது.

தமிழ் பேசும் பகுதிகள் தனித்தனியாக உருவாக்கப்பட்ட போதும், மதராஸ் மாநிலம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. 24.6.1961 அன்று, சட்டப்பேரவையில் மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைக்க வேண்டுமென சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.எஸ். சின்னதுரை கொண்டு வந்த தீர்மானத்தின் மீது அறிக்கையை சமர்ப்பித்த சி. சுப்பிரமணியம், "ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்பதே தொடரட்டும். தமிழில் தமிழ்நாடு என்று அழைப்போம்" என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்காக இப்போது அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

ஆனால், 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது முதல் பணியாக தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் தீர்மானத்தை அன்றைய முதல்வர் அண்ணா சட்டப்பேரவையில் கொண்டு வந்து, நிறைவேற்றினார். அந்த அறிவிப்புக்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டது. அன்று முதல் தமிழ்நாடு என்ற அறிவிப்பு முழுமை பெற்றது.

1996 இல் அன்றைய முதல்வர் கருணாநிதி மெட்ராஸ் மாநகரத்தின் பெயரை, சென்னை என்று மாற்றம் செய்து அறிவித்தார். இத்தகைய நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று தமிழ் மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்நாளை தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும். இது ஒரு மகிழ்ச்சியான நாளாக தமிழ்நாடு காங்கிரஸ் கருதுகிறது.

இதை தமிழர்கள் அனைவரும் கட்சி எல்லைகளைக் கடந்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவது மிகுந்த சிறப்புக்குரியதாகும். இந்த கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற வேண்டும்," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x