

மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டீக்கடையில் காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதில் தந்தை, மகள் மரணம் அடைந்தனர். மேலும் ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டி அருகில் உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா(40). மாற்றுத்திறனாளியான இவர், அதே ஊரில் வீட்டின் முன் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சீதா. இவர்களது மகள்கள் பிரதிபா(8), ஹேமலதா(6).
மனைவி மீது கருப்பையாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சீதா கோபித்துக் கொண்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கருப்பையா தனது இரு மகள்களையும் கவனித்து வந்தார். இந்நிலையில், கருப் பையாவின் டீக்கடையில் காஸ் சிலிண்டர் நேற்று பிற்பகல் 1.50 மணி அளவில் திடீரென வெடித்தது. கடை, வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதில் கருப்பையா, வீட்டுக்குள் இருந்த மகள் பிரதிபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
இருவரது உடல்களையும் உசிலம்பட்டி தாலுகா போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ஹேமலதா உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மனைவி வீட்டைவிட்டுச் சென்றதால், இரு குழந்தைகளுடன் இனிமேல் எப்படி வாழ்வது என்ற மனவேதனையில் கருப்பையா இருந்துள்ளார். இந்நிலையில், குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றியும், காஸ் சிலிண்டரை திறந்துவிட்டும் தீ வைத்துள்ளார் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருப்பையாவும், பிரதிபாவும் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு மகள் 50 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.