Published : 01 Nov 2019 01:37 PM
Last Updated : 01 Nov 2019 01:37 PM

'தலைவி' படத்தை எடுக்க தடை விதிக்க கோரி தீபா மனு: விரைவில் விசாரணை

சென்னை

தனது அனுமதியில்லாமல், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டு உருவாகி வரும் 'தலைவி' படத்தை எடுக்க தடை விதிக்க கோரி தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் தமிழிலும், 'ஜெயா' என்ற பெயரில் இந்தியிலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதே போல் கவுதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் 'தலைவி' படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜெயலலிதாவின் வாழ்க்கை விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் இணையதள தொடரை எடுக்க அனுமதிக்க முடியாது என்றும் இந்த கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கு பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிப்பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x