அடுத்த 3 தினங்களுக்கு கடலோர, உள் மாவட்டங்களில் லேசான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை
அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடலோர, உள் மாவட்டங்களில் லேசான மழை இருக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்று (நவ.1) சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், "மஹா புயல் தற்போது கிழக்கு அரபிக்கடலில் இருக்கிறது. அடுத்த இரு நாட்களுக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அதன்பிறகு மீண்டும் வடகிழக்கு திசையில் நகர்ந்து குஜராத் பக்கம் செல்கிறது. அதனால், தமிழ்நாட்டு மக்களுக்கோ மீனவர்களுக்கோ எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை இப்போதைக்கு எதுவும் இல்லை.
வரும் 3-ம் தேதி அந்தமான் கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்படும். அதையடுத்து, 2 நாட்களுக்குப் பிறகு, மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதுவும் வடமேற்கு திசையில் தான் நகரும். எனவே, அதனால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. மீனவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை.
அடுத்த 3 தினங்களுக்கு தமிழக கடலோர, உள் மாவட்டங்களில் லேசான மழை இருக்கும். நவம்பர் மாதம் தான் தமிழகத்திற்கு அதிக மழை இருக்கும். அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழை இருக்கும். கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரியில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் 1-5 செ.மீ. மழை பெய்துள்ளது," என தெரிவித்தார்.
