Published : 01 Nov 2019 11:56 AM
Last Updated : 01 Nov 2019 11:56 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: அதிமுகவின் பலம் 124 ஆக உயர்வு

முத்தமிழ்செல்வன் - நாராயணன்: கோப்புப்படம்

சென்னை

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த அக்.21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தல் முடிவுகள் அக்.24-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் முத்தமிழ்செல்வனும், நாங்குநேரியில் அதிமுகவின் நாராயணன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற இரு எம்எல்ஏக்களும் கடந்த அக்.29-ம் தேதி பதவியேற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சமயத்தில் திருச்சி, மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் மீட்பு பணி நடைபெற்றதால், பதவியேற்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இரு எம்எல்ஏக்களும் இன்று (நவ.1) சட்டப்பேரவை சபாநாயகர் அறையில், சபாநாயகர் தனபால் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டதாக, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஏற்கெனவே 122 ஆக இருந்த நிலையில், தற்போது பதவியேற்றுக்கொண்ட 2 எம்எல்ஏக்களையும் சேர்த்து 124 ஆக உயர்ந்துள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x