நீட் தேர்வு முறைகேடு வழக்கு: திருப்பத்தூர் மருத்துவ மாணவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: திருப்பத்தூர் மருத்துவ மாணவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்
Updated on
1 min read

மதுரை

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் திருப்பத்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் முகமது இர்பானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இர்பான் தினமும், மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

திருப்பத்தூரைச் சேர்ந்தவர் மருத்துவ மாணவர் முகமது இர்பான் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளங்கலை மருத்துவம் பயின்றுவந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நான் எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், மாணவரின் தந்தையே இந்த முறைகேட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நீட் தேர்வு நடந்தபோது மாணவர் மொரீஷியஸில் இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மதுரை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன்பாக தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் மாணவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவரின் தந்தையின் ஜாமீன் மனுவையும் இங்கேயே தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in