

சென்னை
ஜம்மு - காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள் ளது சட்ட விரோதமானது. இத னால் காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும் இஷ்டம்போல் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் அபாயம் உள்ளது. இதுபோல மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் யூனியன் பிரதேசங்களாக மாற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. எனவே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள சட்டதிருத்தம் செல்லாது என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜ ராகி, “மாநில அரசுகளின் அதிகாரத் தில் மத்திய அரசு தலையீடு செய்வதை அனுமதித்தால் ஜம்மு - காஷ்மீரைப் போல தமிழகத்தையும் பிரிக்க வாய்ப்புள்ளது. எனவே மாநில அரசின் அனுமதியின்றி ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசின் நடவடிக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்பது தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தனர்.
மனுதாரரின் கற்பனை
இந்நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘ஜம்மு - காஷ்மீரைப்போல தமிழகத்தையும் பிரித்து விடுவார்கள் என்ற மனுதாரரின் கற்பனைக்கு எல்லாம் இந்த நீதிமன்றம் பதிலளிக்க முடியாது. இதுதொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரும் இல்லை.
இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பும் இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.மனுதாரர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரும் இல்லை. இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பும் இல்லை.