

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 31 லட்சம் பேருக்கு ரூ.4,198 கோடி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற வேளாண் தொழிலாளர்கள், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதுடைய திருமணமாகாத உழைக்கும் திறனற்ற பெண்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2011-ல் அதிமுக ஆட்சி ஏற்பட்டதும் இந்த ஓய்வூதியம் ரூ.500-லிருந்து ரூ.1000-மாக உயர்த்தப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுதோறும் 31 லட்சம் பேருக்கு ரூ.4,198 கோடி ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பு
தற்போது இத்திட்டங்களை செம்மைப்படுத்தும் வகையில், துறை அலுவலர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்தப்படுகின்றன.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை மண்டலத்தை சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சார் ஆட்சியர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள், அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பில் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியங்கள் கோரி பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்தல், தகுதியுடைய நபர்களை கண்டறிந்து ஆணை வழங்குதல் மற்றும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் சென்றடைவதை உறுதி செய்தல் ஆகிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், சென்னை மேயர் சைதை துரைசாமி, நில நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை செயலர் ஆர்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.