Published : 01 Nov 2019 08:26 AM
Last Updated : 01 Nov 2019 08:26 AM

காந்தி, வல்லபபாய் படேல் பிறந்த நாள் விழா: பாஜக சார்பில் சென்னையில் பாதயாத்திரை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு 

காந்தியடிகள் 150-வது பிறந்த நாள், சர்தார் வல்லபபாய் பட்டேல் 145-வது பிறந்த நாள், தமிழர் பண்பாட்டை உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தல் என முப்பெரும் விழா சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பாதயாத்திரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். உடன், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் எம்.என்.ராஜா, நடிகை கவுதமி. படங்கள்: ம.பிரபு

சென்னை

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோரின் பிறந்த நாள், தமிழர் பண்பாட்டை உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தல் என முப்பெரும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடந்த பாதயாத்திரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

காந்தியடிகளின் 150-வது ஆண்டு பிறந்ததின பாதயாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபபாய் படேல் 145-வது ஆண்டு பிறந்த நாள் ஒற்றுமை நடைபயண விழா, தமிழையும், தமிழர் பண்பாட்டையும் உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறும் விழா என முப்பெரும் விழா தமிழக பாஜக சார்பில் சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதையடுத்து அங்கு வைக்கப் பட்டிருந்த காந்தி உருவப்படத் துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற பாத யாத்திரையில் நிர்மலா சீதாராமனுடன், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் எம்.என்.ராஜா, முன்னாள் அமைச்சர் ஹண்டே, நடிகை கவுதமி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பேனர் வைக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வழிநெடுகிலும் பாஜக கட்சிக் கொடிகள் மட்டும் கட்டப்பட்டிருந்தன. ‘கதர் ஆடை அணிவோம், காந்தியின் கனவை நனவாக்குவோம்’, ‘தனிநபர் கழிப் பிடம் அமைப்போம், தன்மானம் காப்போம்’, ‘தூய்மை நாட்டையும் உயர்த்தும், நம் வீட்டையும் உயர்த்தும்’ என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை கட்சித் தொண்டர்கள் ஏந்தி வந்தனர். பாதயாத்திரையில் கலந்துகொண்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தனர்.

கஜபதி தெரு சந்திப்பில் உள்ள வடிவுடையம்மன் கோயில் அருகே பாதயாத்திரை முடிவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபபாய் படேல் படத்துக்கு நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து பாஜக மகளிர் அணி சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பாதயாத்திரை நடைபெற்ற சுமார் 3 கி.மீ. தூரமும் சாலையில் பொதுமக்களுக்கு வணக்கம் கூறியபடி நிர்மலா சீதாராமன் சென்றார். சில இடங்களில் மழை தூறல் விழுந்தது. சாலையிலும் தண்ணீர் தேங்கியிருந்தது. குடைகூட பிடிக்காமல் மத்திய அமைச்சர் நடந்து சென்றது பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x