

சென்னை எம்ஜிஆர் நகரில் மதுபோதையில் இரண்டரை மாத கைக்குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். கொலையை மறைத்து நாடகமாடிய தாயையும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகரை அடுத்த எம்ஜிஆர் நகர், டாக்டர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் எல்லப்பன் (27). இவர் அதே பகுதியில், கணவரைப் பிரிந்து வாழும் துர்கா(25) என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார். துர்காவுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளன.
தற்போது இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரண்டரை மாதமான அந்தக்குழந்தைக்கு ராஜமாதா என்று பெயர் வைத்துள்ளனர். எல்லப்பனுக்கும், துர்காவுக்கும் மதுப்பழக்கம் உண்டு. இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி மது அருந்தும்போது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சண்டையிட்டுக்கொள்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வாக இருந்துள்ளது.
நேற்றிரவு மது அருந்திய நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டு சண்டையிட்டுள்ளனர். அப்போது இரண்டரை மாத பெண் குழந்தை பாலுக்காக அழுதுள்ளது. சண்டைபோடும் ஆத்திரத்திலிருந்த எல்லப்பன் பச்சிளங்குழந்தை என்றும் பாராமல் தாக்கியுள்ளார்.
கையால் தலையில் வேகமாக அடித்ததாகக் கூறப்படுகிறது. குழந்தை மயக்கமானது. குழந்தையின் மூக்கிலிருந்து ரத்தம் வரத்தொடங்கியுள்ளது. உடனடியாக அதைச் சுத்தம் செய்து வேறு உடை மாற்றி எல்லப்பனும், துர்காவும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
எல்லப்பன் தாக்கியதில் குழந்தை உயிரிழந்ததை அறிந்த துர்கா, கணவனைக் காப்பாற்றுவதற்காக, குழந்தை கீழே விழுந்ததால் மயக்கமானதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையின் மூக்கில் ரத்தம் வடிவதாலும், தலைப்பகுதியில் சிவந்துபோயிருப்பதையும், பார்த்த மருத்துவர் அவர்களிடம் கேட்டபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதைப்பார்த்துச் சந்தேகமடைந்து எம்.ஜி.ஆர். நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த போலீஸார் குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பிவிட்டு இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து எல்லப்பனை போலீஸார் கைது செய்தனர், தாய் துர்காவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே மதுபோதையால் ஆத்திரத்தில் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.