Published : 31 Oct 2019 05:06 PM
Last Updated : 31 Oct 2019 05:06 PM

6 இடங்களில் என்ஐஏ சோதனை நிறைவு : லேப்டாப், செல்போன்கள், மெமரி கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

சென்னை

தமிழகம் முழுவதும் 6 இடங்களில் நடத்தப்பட்ட என்ஐஏ சோதனை நிறைவு பெற்றது. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏராளமான செல்போன்கள், லேப்டாப், மெமரி கார்டு உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்து அமைப்பு தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக், அன்வர், பைசல் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்கிற ரீதியில் விசாரணை நடந்தது. இதையடுத்து 7 பேர் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை அமைப்பு) மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அன்று கோவையில் உக்கடம், குனியமுத்தூர், வெரைட்டி ஹால், சென்னை, திண்டிவனம் ஆகிய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகம் முழுதும் 6 பேர் இல்லங்களில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தியது. கோவை உக்கடத்தில் சமீர் (22), சவுரிதீன் (30) ஆகியோர் வீட்டிலும் சிவகங்கை இளையான்குடியில் சிராஜுதீன் என்பவர் வீட்டிலும், திருச்சி, காயல்பட்டினம் மற்றும் நாகப்பட்டினத்தில் முகமது அஜ்மல் என்பவர் வீட்டிலும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடந்தது.

கொச்சியிலிருக்கும் என்ஐஏ தலைமையில் இந்தச் சோதனை நடத்தபட்டது. இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரகசியத் தடயங்கள், புதிய தகவலின் அடிப்படையிலும், இலங்கையிலுள்ள ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதியுடன் தொடர்பிலிருந்த தகவல் அடிப்படையில் இன்றைய சோதனை நடந்ததாக என்ஐஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

4 மணி நேர சோதனையின் முடிவில் 2 லேப்டாப், 8 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு மற்றும் 14 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவை தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படும் என்றும் சோதனையின் முடிவில் யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் அவர்களிடம் தேவைப்பட்டால் விசாரணை நடக்கும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x