போராடும் மருத்துவர்களை மிரட்டி பழிவாங்குவது நியாயமற்றது: மார்க்சிஸ்ட்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

போராடும் மருத்துவர்களை மிரட்டி பழிவாங்குவது நியாயமற்றது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்.31) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஏழு நாட்களாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட சில மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் நீண்டகாலமாக நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தபோதும், ஏற்கெனவே பல கட்டப் போராட்டங்களை நடத்தியபோதும், தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது அரசின் தவறான அணுகுமுறையாகும். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர அரசு மருத்துவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையில் அமைதியாகப் பணிபுரிந்து வந்த மருத்துவர்களை இத்தகைய போராட்டத்தில் தள்ளிவிட்டது தமிழக அரசுதான் என்பதை மூடி மறைக்க முடியாது.

போராடும் அரசு மருத்துவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மருத்துவர்களை ஊர் மாற்றம் செய்வதும், பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மாற்று மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என மருத்துவர்களை மிரட்டும் அரசின் ஆணவப்போக்கு ஒருபோதும் வெற்றிபெறாது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் பரவி வருவதால், அதிகமான நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள், பொதுமக்கள் நாளைய மருத்துவர்களாகவுள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும்" என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in