

இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இளைஞரிடம் என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடத்தினர். மேலும் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சக்தி சேனா அமைப்புத் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக் ஆகிய 5 பேரை கடந்த ஆண்டு செப்டம்பரில் போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கைதானவர்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்தது. மேலும் 7 பேர் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஆண்டு டிசம்பரில் என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இதேபோல் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பான வழக்கையும் என்ஐஏ விசாரித்து வந்தது. இந்நிலையில் இன்று என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
இளையான்குடி சாலையூரில் நூர்முகமது மகன் சிராஜூதினிடம் (22) அதிகாலை 5:30 மணிக்கு என்ஐஏ ஆய்வாளர் சுபிஸ் தலைமையிலான 3 பேர் விசாரணை நடத்தினர்.
மேலும் அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணைக்கு சென்னை அலுவலகத்திற்கு வருமாறு தெரிவித்துவிட்டு சென்றனர்.