Published : 31 Oct 2019 03:32 PM
Last Updated : 31 Oct 2019 03:32 PM

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை: மதிமுக கூட்டத்தின் 7 தீர்மானங்கள்

மதிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட வைகோ உள்ளிட்டோர்.

சென்னை

டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டமும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டமும் இன்று (அக்.31) சென்னை தாயகத்தில் அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1:

கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும்.

தீர்மானம் 2:

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் முல்லைப் பெரியாறு உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் 3:

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் குழந்தை சுஜித் உயிரிழந்தது போன்ற துயரங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதுடன், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கத் தேவையான உயரிய தொழில்நுட்பங்களை மத்திய - மாநில அரசுகள் பல்வேறு துறை நிபுணர்களின் உதவியோடு உருவாக்க வேண்டும்.

தீர்மானம் 4:

மத்திய அரசு உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து, விவாதித்து இந்திய விவசாயிகளின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தீர்மானம் 5:

டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று மறைந்த ஜெயலலிதா 2016-ல் முதல்வர் பதவி ஏற்றபோது வாக்குறுதி அளித்தார். அவர் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன் டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் 6:

தமிழக அரசு உடனடியாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் 7:

மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி செயல்பட்டு, 'கியார்' புயலில் சிக்கி உள்ள குமரி மாவட்ட மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மதிமுக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x