38 மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை: தருவைக்குளத்தில் உறவினர்களிடம் எம்.பி. கனிமொழி உறுதி

38 மீனவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை: தருவைக்குளத்தில் உறவினர்களிடம் எம்.பி. கனிமொழி உறுதி
Updated on
1 min read

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று தற்போது வரையிலும் கரைக்கு திரும்பாத 38 மீனவர்களையும் பத்திரமாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

குமரிக் கடலில் திருவனந்தபுரத்துக்கு அருகே உருவாகியுள்ள கியார் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கடலில் மீன்பிடித் தொழில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திலிருந்து கடந்த மாதம் 13-ம் தேதி ஒரு விசைப்படகில் 10 பேர், 16-ம் தேதி 2 விசைப்படகுகளில் 18 பேர் , 23-ம் தேதி ஒரு விசைபடகில் 10 பேர் என மொத்தம் 38 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். அவர்கள் நீண்ட நாட்கள் தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

புயல் உருவாகியுள்ளதால் கடலுக்குச் சென்ற அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டுமென அறிவிக்கப்பட்ட நிலையில் மேற்படி 38 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது தெரியவந்தது.

உடனே தருவைக்குளத்தைச் சேர்ந்த மீனவர்கள், 38 மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென தூத்துக்குடி ஆட்சியர் சந்திப்நந்தூரி மற்றும் தூத்துக்குடி தொகுதி எம்பி., ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், இன்று (அக்.31) காலை தருவைகுளத்திற்கு சென்ற கனிமொழி எம்பி., மீனவர்களை சந்தித்து மீட்பு நடவடிக்கைக்கு தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, "புயல் எச்சரிச்சைக்கு முன்னரே மீன்பிடிக்கச் சென்ற 38 மீனவர்கள் நிலை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

தற்போது 4 படகுகளில் உள்ள மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒரு படகில் சென்ற மீனவர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

பின்னர், மீளவிட்டான் சாலை பகுதியில் உள்ள வாய்க்கால் அடைப்புகளை பொக்லைன் இயந்திரம் முலம் அகற்றுவதை பார்வையிட்டார். சின்னகண்ணுபுரம் பகுதியில் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். விஎம்எஸ் நகர் பகுதி மக்கள், தங்களிடம் நேரில் வந்து விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொண்டமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in