Published : 31 Oct 2019 12:06 PM
Last Updated : 31 Oct 2019 12:06 PM

மருத்துவர்கள் போராட்டம்: பணிக்குத் திரும்பாவிட்டால் அரசு வேடிக்கை பார்க்காது; முதல்வர் பழனிசாமி

சென்னை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம், ஓமலூரில் இன்று (அக்.31) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மருத்துவர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், "அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கம்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கத்தை அழைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆனால், அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசை நம்புகிறோம் என, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் சங்கம் கூறியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு ஆகும் செலவு 13,500 ரூபாய். மொத்த ஆண்டிலும் அவர்கள் 67,500 ரூபாய்தான் கட்டணமாகச் செலுத்துகின்றனர். ஆனால், ஒரு மாணவருக்கு அரசாங்கம் 1.42 கோடி ரூபாய் செலவழிக்கிறது. அத்தனையும் மக்களின் வரிப்பணம். தனியார் மருத்துவக் கல்லூரியில் 1-1.50 கோடி ரூபாய் செலுத்தித்தான் படிக்க முடியும்.

அரசு செலவழித்து படிக்கும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும். நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை எப்படி நிறைவேற்ற முடியும்?

ஏழை, எளிய மக்கள்தான் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் மருத்துவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மருத்துவர்கள் கூறினால் அதனை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. மக்கள்தான் முக்கியம். மருத்துவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.

மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களின் பணியிடங்கள் காலியானவை என அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனை அரசு நடைமுறைப்படுத்தும்," என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x