Published : 31 Oct 2019 12:01 PM
Last Updated : 31 Oct 2019 12:01 PM

திமுக ஆட்சியின்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் உயிருடன் மீட்கவில்லை? - முதல்வர் பழனிசாமி கேள்வி

சேலம்

திமுக ஆட்சியிலிருந்த போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் உயிருடன் மீட்கவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம், ஓமலூரில் இன்று (அக்.31) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:

"குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்கத்தான் அரசு திட்டமிட்டுச் செயலாற்றியது. அதற்காகத்தான் தேசியப் பேரிடர் மீட்புத் துறை, மாநிலப்பேரிடர் மீட்புத் துறை, என்ஐடி, என்எல்சி, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களைத் தொடர்புகொண்டு தொழில்நுட்பம் மூலம் குழந்தையை மீட்பதற்காகப் பணியாற்றினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து தவறான குற்றச்சாட்டை வேண்டுமென்றே முன்வைக்கிறார். நான் கோபப்பட்டுப் பேசியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது உண்மையல்ல. வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஸ்டாலின் பேசி வருகிறார். தீபாவளி, மழை என எதனையும் பொருட்படுத்தாமல் பல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் பேசுவது வருத்தம் அளிக்கிறது. 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம், தேனி மாவட்டம் தோப்புப்பட்டி எனும் கிராமத்தில் மாயி இருளன் என்ற 6 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார். அப்போது திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மீட்புப் பணிகளின்போது ஒரு அமைச்சர் கூட அங்கு செல்லவில்லை. அப்போது, துணை முதல்வராக இருந்த ஸ்டாலினும் செல்லவில்லை. எந்தத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவில்லை. இறந்துதான் சிறுவனை மீட்டனர்.

இதனைக் குற்றச்சாட்டாக சொல்லவில்லை, நிலைமையைச் சொல்கிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம், காலதாமதத்தால் குழந்தை சுஜித் இறந்ததாக ஸ்டாலின் சொல்கிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது, அந்த 6 வயது சிறுவனை ஏன் உயிருடன் மீட்கவில்லை? பொய்யான செய்தியைப் பரப்புகிறார் ஸ்டாலின். உண்மை நிலையைச் சொல்ல வேண்டும். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு இரவு, பகலாக பணியாற்றினர். தேசியப் பேரிடர் மீட்புத் துறை என்பதே துணை ராணுவத்தில் உள்ளவர்கள் தான். ஆனால் ராணுவத்தை அழைக்கவில்லை என ஸ்டாலின் சொல்கிறார்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார்.

தாங்கள் இத்தகைய குழந்தை மீட்பில் ஈடுபட்டதில்லை என, தேசியப் பேரிடர் மீட்புத் துறை கூறியுள்ளதே?

ராணுவத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும்? அவர்களுக்கு எதிர்த்து நிற்பவர்களை சுடத்தான் தெரியும். தேசியப் பேரிடர் மீட்புத்துறையை மீட்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, மத்திய அரசே உத்தரவிட்டிருக்கிறது. தான் சொன்னதை உண்மையாக்க ஸ்டாலின் திரும்பத் திரும்ப பொய் சொல்கிறார்.

இதனை அரசியலாக்குகிறார்களா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும். பெற்றோர்களே ஒப்புக்கொண்டனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இனி இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது. மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருந்து அரசுக்கு ஒத்துழைக்க ஏண்டும். ஆழ்துளைக் கிணறு திறந்திருந்தால் மூட வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x