

இந்து அமைப்பு தலைவர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில், கூடுதல் தகவலை அடுத்து தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவுதீன், ஜாபர் சித்திக், சம்சுதீன், கோவையைச் சேர்ந்த ஆஷிக் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த அன்வர், பைசல் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா என்கிற ரீதியில் விசாரணை நடந்தது. இதையடுத்து 7 பேர் மீதும் தேசிய சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் என்ஐஏ-வுக்கு (தேசிய புலனாய்வு முகமை அமைப்பு) மாற்றப்பட்டது. ஏற்கெனவே இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பான வழக்கையும் என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கும் மாற்றப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அன்று கோவையில் உக்கடம், குனியமுத்தூர், வெரைட்டி ஹால், சென்னை, திண்டிவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை மெதுவாக நடந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த சமீர் (22), உக்கடம் முதல் வீதி அண்ணா நகரைச் சேர்ந்த சவுரிதீன் (30) ஆகியோர் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேருடன் மேற்கண்ட இருவரும் செல்போன் தொடர்பிலிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இரண்டு இடங்கள் தவிர, சிவகங்கை இளையான்குடியில் சிராஜுதீன் என்பவர் வீட்டிலும், திருச்சி, காயல்பட்டினம் மற்றும் நாகப்பட்டினத்தில் முகமது அஜ்மல் என்பவர் வீட்டிலும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடக்கிறது.
இதில் முகமது அஜ்மல் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது. கொச்சியிலிருக்கும் என்ஐஏ தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. இந்து இயக்கத் தலைவர்களைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை என்ஐஏ ஏற்கெனவே கைது செய்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரகசியத் தடயங்கள், புதிய தகவலின் அடிப்படையில் கூடுதலாக சிலர் வீடுகளில் இன்றைய சோதனை நடைபெற்று வருகிறது என என்ஐஏ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.