Published : 31 Oct 2019 10:57 AM
Last Updated : 31 Oct 2019 10:57 AM

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழா முதல்வர், துணை முதல்வர், ஸ்டாலின் மரியாதை: கொட்டும் மழையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

கமுதி

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா, கடந்த 28-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

நேற்று தேவர் நினைவிடத்தில் அரசு சார்பில் காலை 9.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன், ரவீந்திரநாத் குமார் எம்.பி., எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன், சதன் பிரபாகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

சேவைகள் நினைவு கூரப்படும்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தேவர் குருபூஜையை அரசு விழாவாக அறிவித்தார். அதன்படி, 1979 முதல் தேவர் குருபூஜை அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1994-ல் சென்னை நந்தனத்தில் தேவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவினார். 2014-ல் 13.5 கிலோ எடையிலான தங்கக் கவசம் செய்து, அவரே நேரில் வந்து பசும்பொன் தேவர் சிலைக்கு அணிவித்தார். தேவரின் சேவைகள் எப்போதும் நினைவு கூரப்படும்” என்றார்.

அரசு விடுமுறைக்கு பரிசீலிப்போம்

தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரிய சாமி, சத்தியமூர்த்தி, பெரியகருப் பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் அன்பில் மகேஷ், டிஆர்பி ராஜா, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஸ்டாலின் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “பசும் பொன் என்றாலே சுத்த தங்கம். அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர். எம்.பி., எம்எல்ஏவாக இருந்து தமது சமுதாய மக்களுக் காக குரல் கொடுத்தவர். திமுக ஆட்சிக்கு வரும்போது தேவர் குருபூஜை அன்று அரசு விடுமுறை அளிக்க பரிசீலிக்கப்படும்” என்றார்.

பின்னர், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் பி.டி.அரச குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமமுக பொதுச் செயலா ளர் தினகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தேமுதிக பொருளாளர் பிரேம லதா, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., பாமக சார்பில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஹக்கீம், மாநில பொருளாளர் திலகபாமா, மாநில துணைப் பொதுச் செயலாளர் கள் சிவஞானம், செல்வகுமார் உள்ளிட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்னில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வந்தபோதும் மழை பெய்தது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் மழையில் நனைந்தவாறே மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x